×

மலைப்பகுதியில் பலத்த மழை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

*சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி : குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேளைகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

நேற்று அதிகாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவில் தாண்டி தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியில் படிக்கட்டுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி நேற்று அதிகாலை 3 மணி முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்த தடையின் காரணமாக விடுமுறை தினமான நேற்று குற்றாலத்திற்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

The post மலைப்பகுதியில் பலத்த மழை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Western Ghats ,Courtalam ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...