×

வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: மேம்பாலத்தில் சடலம் வீச்சு

பள்ளிகொண்டா, ஜன.8: பள்ளிகொண்டா அருகே வாலிபரை சராமாரியாக வெட்டி கொன்று, சடலத்தை மேம்பாலத்தின் மீது வீசி சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி பழைய மேம்பாலத்தின் மீது வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ நாராயணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு, வாலிபர் படுகொலை செய்யப்பட்டு இருந்த இடத்தினை சுற்றி ஆய்வு செய்தார். அப்போது, சடலம் இருந்த மேம்பாலத்தின் கீழ் மதுபாட்டில்களுடன், ஜூஸ் பாட்டில்கள் கிடந்தது. மேலும், மேம்பால சாலையில் கார் டயர் தடயங்கள் கிடந்தன. மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபர் நேற்று முன்தினம் இரவு வேறொரு பகுதியில் கொலை செய்யப்பட்டு நள்ளிரவுக்கு மேல் குற்றவாளிகள் சடலத்தை மேம்பாலத்தின் மீது வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து கைரேகை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்மந்தமான தடயங்களை போலீசார் சேகரித்தனர். இதனிடையே எஸ்பி மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு வந்தபோது மோப்பநாய் சாரா சடலத்தை மோப்பம் பிடித்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஆம்பூர் நோக்கி ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து கொலையான நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்டு மேம்பாலத்தில் சடலம் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி கேமராக்கள் ஆய்வு: கொலையான வாலிபர் சடலம் வீசப்பட்ட பகுதியில் இருந்த காரின் டயர் அடையாளத்தை போலீசார் படம் பிடித்தனர். தொடர்ந்து அந்த காரை கண்டுபிடிக்க, தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சென்ற கார்கள் குறித்து விவரங்கள் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் வாலிபரை அடையாளம் காண சமீபத்தில் யாராவது காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வருகிறாதா? எனவும் கண்காணித்து வருகின்றனர்.

The post வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: மேம்பாலத்தில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Juvenile Saramari massacre ,Skoligonda ,Vellore district ,Sinnsari National Highway ,Jubilar Saramari Massacre: ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் மீட்பு