×

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 பெற 5.26 லட்சம் பேருக்கு டோக்கன் விநியோகம் துவங்கியது

தூத்துக்குடி, ஜன.8: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 10 தாலுகாக்களைச் சேர்ந்த 5.26 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று முதல் துவங்கியது. தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 960 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகிப்பதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது. முதற்கட்டமாக முறையே தூத்துக்குடி தாலுகாவில் 1,39,067, வைகுண்டம் தாலுகாவில் 36,607, ஏரல் தாலுகாவில் 41,965, திருச்செந்தூர் தாலுகாவில் 67,001, சாத்தான்குளம் தாலுகாவில் 29,686, கோவில்பட்டி தாலுகாவில் 73,599, கயத்தாறு தாலுகாவில் 31,774, விளாத்திகுளம் தாலுகாவில் 44,534, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 37,277, எட்டயபுரம் தாலுகாவில் 25,051 என்றவாறு இந்த 10 தாலுக்காக்களிலும் மொத்தம் உள்ள 5,26,561 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று துவங்கியது.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பலரும் காலை முதலே, பொங்கல் பரிசு டோக்கனை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனர். தூத்துக்குடி 3வது வார்டு கவுன்சிலர் ரங்கசாமி அவரது வார்டு பகுதியிலுள்ள ரேஷன்கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்களை வழங்கினார். தூத்துக்குடி டூவிபுரம் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பெறுவதற்கான லிஸ்ட்டில் தங்கள் ரேஷன் அட்டை எண் உள்ளதா என்று பெண்கள் உள்பட பலரும் பார்த்தனர். தூத்துக்குடி கே.டி.சி.நகர் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு டோக்கனைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து டோக்கனை பெற்றுச் சென்றனர்.

The post தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 பெற 5.26 லட்சம் பேருக்கு டோக்கன் விநியோகம் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Thoothukudi district ,Thai Pongal ,Tamils ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...