×

சென்னையிலிருந்து பீகார் சென்ற கங்கா காவேரி விரைவு ரயில் மீது கல் வீச்சு:  7 பெட்டிகளில் கண்ணாடி உடைந்தது  மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

திருவொற்றியூர், ஜன.7: சென்னையிலிருந்து பீகார் சென்ற கங்கா காவேரி விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலம் சாப்ரா வரை செல்லக்கூடிய 20 பெட்டிகளை கொண்ட கங்கா காவேரி விரைவு ரயில், நேற்று அதிகாலை 2.15 மணிக்கு எண்ணூர் யார்டில் இருந்து சென்ட்ரல் சென்று, அங்கிருந்து பயணிகளை ஏற்றி செல்வதற்காக விம்கோ நகர் மார்க்கமாக சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் இந்த ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில் ரயிலின் குளிர்சாதன மற்றும் சமையலறை உள்பட 7 பெட்டிகளின் கண்ணாடிகளும் உடைந்தது. அப்போது பெட்டியில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின்னர் ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார், ரயில் பெட்டிகளை சோதனையிட்டனர். சிறிது நேரத்திற்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து தண்டையார்பேட்டை மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து, ரயில் பெட்டி கண்ணாடிகளை கல் வீசி உடைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். திருவொற்றியூர் முதல் விம்கோ நகர் வரை உள்ள ரயில் பாதை அருகே இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மது அருந்துவதாகவும், இதனால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களில் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post சென்னையிலிருந்து பீகார் சென்ற கங்கா காவேரி விரைவு ரயில் மீது கல் வீச்சு:  7 பெட்டிகளில் கண்ணாடி உடைந்தது  மர்ம நபர்களுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Ganga ,Chennai ,Tiruvottiyur ,Ganga Cauvery Express ,Bihar ,Chennai Central Railway Station ,Chhapra, Bihar State ,
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது