×

சாக்ரடீஸ் கேரக்டராக இருந்தாலும் அதன் மூலம் திராவிட கொள்கையை சொன்னவர் கலைஞர்: நடிகர் கமல்ஹாசன் புகழாரம்

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரைப்படத் துறை சார்பில் சென்னையில் நேற்று பிரமாண்ட விழா நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டனர்.

விழாவில், நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: சமீபத்தில் நம்மை விட்டு மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை நடத்தி தந்த பண்புக்கு வணக்கம், இது அவர் எங்கிருந்து கற்றார் என்பது எனக்கு தெரியும். அவருக்கும் வணக்கம், கலைஞர் ஒரு துறையில் இருந்து கொண்டு மற்றொரு துறையை தூக்கி பிடிக்கிற பணியை வாழ்நாள் முழுவதும் செய்தார். 5 முறை முதல்வராக இருந்தாலும் சினிமாவை மறக்காதவர். எனது தமிழ் ஆசான்கள் மூன்று பேர் முதல்வர் கலைஞர், அவர் வசனத்தை பேசி நடித்த சிவாஜி, மூன்றாவதாக எம்ஜிஆர். இந்த மூன்று பேரும்தான் தமிழ் சினிமா என்னும் கோட்டையை கட்டியவர்கள்.

சினிமாவின் முழு பலத்தையும் அறிந்தவர் கலைஞர். தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ் நாட்டையும் வளர்த்தார். பாடல்களில் மூழ்கி கிடந்த சினிமாவை வசன சினிமாகாக மாற்றியவர். கதை எதுவாக இருந்தாலும் அதில் பகுத்தறிவு கொள்கை திராவிட கருத்துகளை வைத்தார். சாக்ரடீஸ் கேரக்டராக இருந்தாலும் அதன் மூலமும் திராவிட கொள்கையை சொன்னவர். 75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வசனங்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஆங்கில இயக்குநரான எல்லிஸ் ஆர் தங்கன் தனக்கு பிடித்த வசன கர்த்தவாக கலைஞரை வைத்திருந்தார்.

நவீன சினிமாவில் வசன சிற்பி, அரசியலில் துணிச்சலான, சாதுர்யமான முடிவுகளை எடுத்தவர். திரைப்பட மேம்பாட்டு கழகம் அமைத்தார், விருது தொகையை உயர்த்தினார். தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிவிலக்கு அளித்தார். இப்படி ஏராளமான பணிகளை சினிமாவிற்கு செய்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த விழாவை நடத்துகிறோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாட வேண்டும் என்ற பாடத்தை அவரிடம் கற்றேன். அவர் எனக்கு கலைஞானி பட்டம் கொடுத்தார், அதுவே எனக்கு பெருமை. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

The post சாக்ரடீஸ் கேரக்டராக இருந்தாலும் அதன் மூலம் திராவிட கொள்கையை சொன்னவர் கலைஞர்: நடிகர் கமல்ஹாசன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Socrates ,Kamal Haasan ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Ministers ,Udhayanidhi Stalin ,K. N. Nehru ,Saminathan ,Rajinikanth ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...