×
Saravana Stores

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடக்கம் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு: அமெரிக்கா உள்பட 50 நாடுகள் பங்கேற்பு; 450 தொழில் அதிபர்கள் உள்பட 30 ஆயிரம் பிரதிநிதிகள் வருகை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தை 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் தொடங்­குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கிவைத்து தலைமை உரை­யாற்­று­கி­றார். முன்னதாக தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­கிறார். மேலும், ஒன்றிய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்று பேசுகி­றார். இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்­தப்­ப­ட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்­கள், மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் 2 நாட்­க­ளும் நடத்­தப்­பட உள்­ளன. தொடக்க விழாவை பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு ஒளிப­ரப்ப மாவட்ட ஆட்­சி­யர்­கள் மூலம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்ளது.

தொடர்ந்து, இந்த மாநாட்­டின் 2ம் நாளான நாளை (8ம் தேதி) பல்­வேறு நாடு­க­ளின் தொழில்­நி­று­வ­னங்­கள் தமிழ்­நாடு அர­சு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­திட உள்­ளன. சில புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள், முத­ல்வர் மு.க.ஸ்டாலின் முன்­னி­லை­யில், தமிழ்­நாடு அர­சின் தொழில் வழி­காட்டி மையம் மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இத­னைத்தொடர்ந்து நாளை மாலை 4.30 மணிக்கு உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் முத­ல்வர் மு.க.ஸ்டாலின் நிறை­வுரை ஆற்­று­கி­றார். மாநாட்டில் ‘1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை’ எனும் ஆய்வறிக்கை வெளியிடப்பட உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் டான்ஃபண்ட் திட்டத்தை துவக்கி வைக்கிறார். செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை இந்த மாநாட்டில் வெளியிடப்படுகிறது. 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது சிங்கப்பூர் நாடு மட்டும் ரூ.31 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதார நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 26 அமர்வுகளில் 170க்கும் மேற்பட்ட உலக புகழ் வாழ்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் சோம்நாத் உட்பட தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள், மற்றும் பலர் சிறப்புரையாற்றுகிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட தொழில் துறையின் அரங்கம், புத்தொழில் நிறுவனங்களின் அரங்கம், தமிழ்நாடு தொழிற்சூழல் அரங்கம், மற்றும் சர்வதேச அரங்கம் இந்த மாநாட்டின் சிறப்பம்சமாகும்.

* வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: உலகின் முன்னணி மின்வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் இவி கார் மற்றும் மின்கலன் உற்பத்தி தொழிற்சாலையை வின்பாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல். தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்த பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* ஓசூரில் ரூ.7,000 கோடி முதலீடு
சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்தியா மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், ஓசூரில் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு டாடா நிறுவனம் முதலீடு செய்கிறது. இதன்மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், மாவட்டங்களில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைய உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநாட்டில் நாளை கையெழுத்தாகிறது. அதேபோன்று, அடிடாஸ் மற்றும் போயிங் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வர உள்ளன.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடக்கம் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு: அமெரிக்கா உள்பட 50 நாடுகள் பங்கேற்பு; 450 தொழில் அதிபர்கள் உள்பட 30 ஆயிரம் பிரதிநிதிகள் வருகை appeared first on Dinakaran.

Tags : M.U. K. The World Investor Conference ,Chennai ,Stalin ,United States ,Mudhalvar ,Trade Center ,Nandambakkam, Chennai ,Singapore ,Korea ,UK ,Japan ,France ,Australia ,Germany ,Denmark ,Dinakaran ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்