×

தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க காங்கிரசில் 5 ‘ஸ்கிரீனிங்’ கமிட்டி அறிவிப்பு: தமிழ்நாட்டுக்கு ஹரிஷ் சவுத்ரி நியமனம்

புதுடெல்லி: தேர்தல் பணிகளை மேற்பார்வையிட காங்கிரசில் ‘ஸ்கிரீனிங்’ கமிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு ஹரிஷ் சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்தல் மற்றும் ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான லோக்சபா ‘ஸ்கிரீனிங்’ கமிட்டியை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ‘ஸ்கிரீனிங்’ கமிட்டியானது லோக்சபா தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு பணிகளை மேற்பார்வையிடும் அமைப்பாகும். காங்கிரஸ் கட்சி தற்போது அமைத்துள்ள ‘ஸ்கிரீனிங்’ கமிட்டியானது 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

கிளஸ்டர்- 1 பிரிவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த கிளஸ்டரின் தலைவராக ஹரிஷ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். கிளஸ்டர்- 2 பிரிவில் ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபார் போன்றவை உள்ளன. இந்த கிளஸ்டரின் தலைவராக மதுசூதனன் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கிளஸ்டர்- 3 குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களுக்கான தலைவராக ரஜினி பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். கிளஸ்டர்- 4 பிரிவில் உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், சண்டிகர், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியின் தலைவராக பக்த சரண் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கிளஸ்டர்- 5 பிரிவில் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய பகுதியின் தலைவராக ராணா கேபி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் ஸ்கிரீனிங் கமிட்டியில் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் தலைவராகவும், மற்ற 2 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இதில் மாநில தலைவர் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அல்கா லம்பாவை, அகில இந்திய மகிளா காங்கிரஸின் தலைவராகவும், மவுலானா தொகுதியின் எம்எல்ஏவான வருண் சவுத்ரியை இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. வரும் நாட்களில் மாநில அளவிலான மாற்றங்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தியா’ கூட்டணி நாளை பேச்சுவார்த்தை
வருகிற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஐந்து ‘ஸ்கிரீனிங் கமிட்டி’-களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மக்களவை தேர்தலுக்கான தேசிய கூட்டணி குழுவின் உறுப்பினருமான சல்மான் குர்ஷித் அளித்த பேட்டியில், ‘எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குவோம்.

இதற்காக கூட்டணி கட்சிகளின் தலைமை அல்லது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்கள் எந்த தேதியில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவிக்கிறார்களோ, அந்த தேதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி என்ன எதிர்பார்க்கிறது என்பதை, எங்களது கட்சியின் தலைமையே முடிவு செய்யும். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் இருந்தே பேச்சுவார்த்தையை தொடங்குகிறோம். அதே நாளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பேசுகிறோம். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து, அம்மாநில தலைமை சில கருத்துகளை கூறியுள்ளது. அதனால் அந்த மாநில பேச்சுவார்த்தை பிறகு நடக்கும்’ என்றார்.

The post தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க காங்கிரசில் 5 ‘ஸ்கிரீனிங்’ கமிட்டி அறிவிப்பு: தமிழ்நாட்டுக்கு ஹரிஷ் சவுத்ரி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Screening' Committee ,Congress ,Harish Chaudhry ,Tamil Nadu ,NEW DELHI ,Congress Party ,Lok ,Sabha ,5 ,Screening' Committee in ,Harish Choudhary ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு