×

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்திற்கு 16 மணிநேரம் காத்திருப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தரிசனம் செய்வதற்கு 16 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் சராசரியாக 80 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வருடங்களில் இதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தனர். ஆனால் அப்போதெல்லாம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. மிக அதிக அளவில் கூட்டம் வரும் நாட்களில் மட்டுமே பக்தர்கள் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இந்த மண்டல, மகர விளக்கு காலத்தில் போலீசார் தேவையில்லாமல் பக்தர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்துவதால் தினமும் சராசரியாக 10 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு செங்குத்தான பாதையில் தான் பக்தர்கள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த பாதையில் போலீசார் பல இடங்களில் பக்தர்களை கயிறு கட்டி நிறுத்துகின்றனர். கடந்த இரு தினங்களாக 16 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 84 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

சபரிமலை செல்லும் வழியில் ஆங்காங்கே ஓட்டல்கள் உட்பட சீசன் கடைகள் உள்ளன. இங்கு பொருட்கள் விற்பதற்கு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்களில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளிமாநில பக்தர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப் பிரச்சினை கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. இதுகுறித்து விசாரித்த கேரள உயர் நீதிமன்றத்தின் தேவசம் போர்டு பெஞ்ச், சபரிமலையில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கும் ஓட்டல்கள் மற்றும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

The post சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்திற்கு 16 மணிநேரம் காத்திருப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Ayyappan Temple ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...