×

ஒரே வாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து அம்பத்தி ராயுடு விலகல்.. அரசியலில் இருந்தும் ஒதுங்குவதாக அறிவித்தார்!!

ஹைதராபாத் : ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு, நல்ல ஃபார்மில் இருந்தபோது, 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வுசெய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்தார்.

இருப்பினும், ஐ.பி.எல்-லில் சென்னை கிங்ஸ் சூப்பர் அணிக்காக தொடர்ந்து விளையாடிவந்த அம்பத்தி ராயுடு, இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல்-லில் சாம்பியனாக ஓய்வுபெற்றார். அதன் பின்னர், ஆந்திர அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடவிருப்பதாக அம்பத்தி ராயுடு கூறிவந்தார்.இதன் முடிவில் கடந்த வாரம், கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

இந்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியிலிருந்து விலகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது” என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த 9 நாள் முழுதாக முடியாத நிலையில் அம்பத்தி ராயுடு கட்சியிலிருந்து விலகி இருப்பது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஒரே வாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து அம்பத்தி ராயுடு விலகல்.. அரசியலில் இருந்தும் ஒதுங்குவதாக அறிவித்தார்!! appeared first on Dinakaran.

Tags : YSR ,Ambatti Rayudu ,Congress party ,Hyderabad ,Y.S.R. ,Congress ,Ambathi Rayudu ,Ambati Rayudu ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் கடப்பா நாடாளுமன்ற...