×

மரோலி சூரிய நாராயணர் கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கர்நாடகாவின் தட்சணகன்னடா பகுதியில் பல அற்புதமான கோயில்கள் உள்ளன. அவற்றில்; இரண்டு சூரிய நாராயணர் கோயில்களும் அடக்கம். ஒன்று நரவி சூரியனார் கோயில். இரண்டாவது மரோலி சூரிய நாராயணர் கோயில். கர்கலாவிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் நரவி உள்ளது. மரோலி… மங்களூர் நகருக்கு வெளியே; எட்டு கிலோ மீட்டரில் உள்ளது. இவற்றில் நாம் மரோலி சூரிய நாராயணரை தரிசிக்கச் செல்கிறோம். அதற்குமுன் கதையைத் தெரிந்து கொள்வோம்.

ஒரு காலத்தில் இந்த பகுதி குகைகளையும், காடுகளையும், நீர் நிலைகளையும் கொண்டிருந்தது! இன்றும் அப்படித்தான் உள்ளது!! மரோலி சூரிய நாராயணர் கோயிலுக்கு 1200 வருட வரலாறு உண்டு. தவம் செய்ய ஏற்ற சூழல் இந்த பகுதியில் உள்ளதால், பலர் இங்கு தவம் செய்துள்ளனர். இதில் ஒரு முனிவர்; சூரியன் குறித்து கடும்தவம் செய்தார்!

அவருடைய தவத்தை மெச்சி, சூரியன் ஜோதியுடன் இங்கு காட்சி தந்ததுடன், இங்கு தனக்கு கோயில் எழுப்ப வேண்டும் எனக் கூறி மறைந்தார்! அந்த முனிவரும் மிகுந்த அக்கறை எடுத்து, சூரிய நாராயணனுக்கு கோயில் எழுப்பினார்! பிறகு அன்றைய காலகட்ட மக்களால் வணங்கப்பட்டது. இங்கு ஆட்சிகள், இந்து-ஜைனர்-இஸ்லாமியர் என மாறிக் கொண்டேயிருந்ததால், ஒரு சமயத்தில் கைவிடப்பட்டது. ஒரு சமயம் இந்த பகுதியை ஒரு ஜைன அரசி ஆண்டு வந்தார்!

அவரிடம் பேசி, கோயிலை புதுப்பிக்க கோரினர். இந்த பகுதியில் உள்ள மரோலி, படவு, ஆலபோ, பஜல், கன்னூர், ஜெப்பூ, கன்கனடி ஆகிய 6 கிராமங்களுக்கு இவர் குலதெய்வம் என அறிந்த ராணி, அக்கறை எடுத்து கட்டினார்! இனி கோயிலுக்கு செல்வோமா…? கேரள பாணியில், மங்களூர் ஒடுவேய இந்த கோயில் அமைந்துள்ளது. ஆனால் உள் வேலைகளுக்கு இது ஒரு சிற்பக்கூடம். ஆமாம். இங்கு எங்கு திரும்பினாலும், கண்களை கவரும், மரம் மற்றும் கருங்கல்லில் சிற்பங்கள்.

உள்ளே நுழைந்தால், மிக உயரமான துவஜஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. அதனை தாண்டிச் சென்றால் கோயில் முன் மண்டபம், அழகிய தூண்களில் கம்பீரமாக நிற்கிறது. இப்படி கோயிலினுள் 90 தூண்கள் உள்ளன! அனைத்துமே அற்புத வேலைப்பாடுகளை கொண்டவை! முன்மண்டபம்… தீர்த்த மண்டபத்தை தாண்டினால் கர்ப்பகிரகம் தான். இருபக்கமும் துவார பாலகர்கள் உள்ளனர்.

கர்ப்பகத்தில் சூரியன் கிழக்கு பார்த்து உள்ளார். கோயிலே கிழக்கு பார்த்து தான் உள்ளது! உள்ளே நின்ற கோலத்தில் சூரிய நாராயணர்! மிக பிரபலம் என்பதால் முகம். உடல் உட்பட அனைத்தும், வெள்ளிக்கவசம் போர்த்தி அழகோ அழகு! தங்கக் கவசமும் உண்டாம்! இருகைகளில் ஒருகை ஆசீர்வாதம் செய்கிறது. மற்றொன்று, பூமி நோக்கி உள்ளது. கோயிலில் கூடுதலாக, சிவன், பிரம்மா, சக்தி, பிள்ளையார்ஆகியோரும் உள்ளனர்.

இனி கோயில் ஏன், பக்தர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது எனபார்ப்போம். கோயிலில் தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது. ரத சப்தமியன்று, சூரியன் உச்சத்திற்கு வரும் போது, ஸ்பெஷல் பூஜைநடக்கிறது. அதன்பின் ரத உற்சவம் துவங்குகிறது. இதனிடையே கோயிலில் பல சேவைகள் நடக்கின்றன. அடுத்த நாள் காலை, தேரை தொடர்ந்து இழுப்பர்! இந்த நிகழ்வு காலம் காலமாக தொடருகிறது! கோயில் சார்ந்து பிரம்மோற்சவமும் உண்டு. கோயிலுக்குள்ளேயே, பிரகாரம் போல் சுற்றி வரும் வழி உள்ளது.

இனி பக்தர்கள் சார்ந்து, சிலருசிகர தகவல்கள். அதிகாலையில், சூரிய பகவானுக்கு நடக்கும் அபிஷேகம், பூஜையில், குழந்தை இல்லாத தம்பதியினர் கலந்து கொண்டால், ஒரு வருடத்தில் குழந்தை நிச்சயமாம்! அதுமட்டுமல்ல, கோயிலில், குழந்தை பொம்மையை கட்டி வைத்தால், ஒரு வருடத்தில் குவா…குவா… நிஜ குழந்தையாக வந்துவிடுமாம்! அதுமட்டுமல்ல, தொடர் தலைவலி, தொடர் வயிற்று வலி போன்றவற்றிற்கு, சூரிய நாராயணருக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் குணமாகி விடுமாம். கல்யாணமாகாமல் கஷ்டப்படுபவர்கள். இங்கு வந்து வணங்கிச் சென்றால், ஒரு வருடத்தில் கல்யாணம் நிச்சயமாகி விடுமாம்! இப்படி பல நம்பிக்கைகள் கோயிலுனில், ஒரு வைப்ரேஷன் (அதிர்வு) இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

இங்கு எண்ணெய் கொண்ட போகி மரத்தை பயன்படுத்தி மர வேலைகள் செய்திருப்பதால் தனி பளபளப்பு ஜொலிப்பு! கற்சிற்பங்களும் அழகோ அழகு. வியாழன் – ஞாயிறு ரொம்ப விசேஷம். அதுவும் 9.30 மணிக்கு சென்றால் சிறப்பாக இருக்கும். கூடுதலாகசிவன், பார்வதி, பிள்ளையாரும் உள்ளனர்! தனியாக கோசாலை உள்ளது.

தினமும் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சிறப்பு சாப்பாடு உண்டு. ஞாயிறு காலை மகா அபிஷேகம் மற்றும் ஸ்பெஷல் அலங்காரமும் ஜோர்!கோயிலை விஜயம் செய்ய சிறந்த நேரம் செப்டம்பர் – பிப்ரவரி. இவருக்கு மஹே சூரிய நாராயணர் என சிறப்பு பெயருண்டு.கோயில் திறப்பு: காலை 5.00 – 1.00, மாலை 5.30 – 8.30 மணி வரை தொடர்புக்கு: 08242439524 எப்படி செல்வது: மங்களூரிலிருந்து 8 கி.மீட்டர், பெங்களூரிலிருந்து 358 கி.மீட்டர்.

தொகுப்பு: ராஜிராதா

The post மரோலி சூரிய நாராயணர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Maroli Surya Narayana Temple ,Kunkum ,Anmigam ,Datsanakannada ,Karnataka ,Surya ,Narayan ,Naravi Suryanar ,Temple ,Maroli ,Surya Narayan ,Karkala ,Maroli Surya Narayan Temple ,
× RELATED ங போல் வளை…யோகம் அறிவோம்!