×

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு.. 211 பேரை காணவில்லை!!

டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. ஜப்பானில் கடந்த 1ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியிருந்தது. இது இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா ஆகிய மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வும் ஏற்பட்டது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நிலைமை சீரானதும் வாபஸ் பெறப்பட்டது.நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். வீடுகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. சாலைகள், வீதிகள் இரண்டாக பிளந்தன. மின் கம்பங்கள் சரிந்தன.

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தள்ளது. உயிரிழந்தவர்களில் 59 பேர் வாஜிமா நகரத்திலும், 23 பேர் சுஸு நகரத்திலும், மற்றவர்கள் ஐந்து அண்டை நகரங்களிலும் பதிவாகியுள்ளனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், குறைந்தது 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானின் முக்கிய ஹோன்ஷுவின் இஷிகாவா பிராந்தியத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 211 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இதனிடையே இடிந்த கட்டிடங்களின் கீழ் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இஷிகாவா பகுதியில் சுமார் 23,800 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை, 66,400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் இல்லை. 31,400 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 357 அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு.. 211 பேரை காணவில்லை!! appeared first on Dinakaran.

Tags : Japan ,Tokyo ,Ishikawa ,Nikata ,Dioma ,Yamahada ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...