×

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக ஊட்டி காந்தலில் ரூ.1.35 கோடியில் கட்டப்பட்ட நூலகம், அறிவுசார் மையம்

*தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஊட்டி : ஊட்டி காந்தல் பகுதியில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இளம் தலைமுறையினர் முறையாக இடைவெளியின்றி கல்வி கற்க வசதியாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் கல்வியுடன் சேர்த்து பொது அறிவை வளர்த்து கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் அறிவை வளர்த்து கொள்ளும் வகையிலும், சிவில் சர்வீஸ், டிஎன்பிஎஸ்சி, காவலர் தேர்வு, எஸ்எஸ்சி., உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வசதிக்காகவும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்ட 2021-22ம் ஆண்டுக்கான கேஎன்எம்டி, திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கட்டுமான பணிகள் துவங்கின. தற்போது அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இம்மையத்தை திறந்து வைத்தார். ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா பங்கேற்று குத்து விளக்கேற்றினார். பின்னர் அறிவுசார் மையத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டார். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், நகராட்சி நிர்வாக திருப்பூர் மண்டல இயக்குநர் இளங்கோவன், மண்டல செயற்பொறியாளர் பாலசந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, மாவட்ட நூலக அலுவலர் வசந்தமல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஊட்டி காந்தல் பகுதியில் 387 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1.35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு ஒரே சமயத்தில் 60 மாணவர்கள் அமர்ந்து போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகள் சார்ந்த 2501 புத்தகங்கள் உள்ளன. 20 சிறார்கள் பயிலும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இணைய வசதியுடன் ஆறு கணினிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழிகாட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் முன்வந்துள்ளார். இந்த அறிவு சார் மையத்தை பராமரிக்கவும் பாதுகாக்கவும் பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவுசார் மையத்தின் மூலம் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி வகுப்புகள், மின் கற்றல் தளங்கள் உள்ளிட்ட வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும். டிஜிட்டல் வடிவிலும் புத்தகங்களை படிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரே இடத்தில் போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், வினா வங்கிகள், போன்றவற்றை படிக்கலாம். இளைஞர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக ஊட்டி காந்தலில் ரூ.1.35 கோடியில் கட்டப்பட்ட நூலகம், அறிவுசார் மையம் appeared first on Dinakaran.

Tags : Ooty Kanthal ,Tamil Nadu ,Chief Minister ,Stalin ,Ooty ,Kanthal ,Tamil Nadu… ,Ooty Kandal ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்