×

பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

*பெண் உதவியாளரும் சிக்கினார்

நல்லம்பள்ளி : நல்லம்பள்ளி அருகே, பட்டாவில் பெயரை நீக்கம் செய்ய, விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மிட்டா நூலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜடையன் மகன் கணேசமூர்த்தி. இவரது தாத்தா பச்சையப்பன் மற்றும் அவரது தந்தை காளியப்பன் பெயரில் 18 சென்ட் நிலம் இருந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு, இந்த நிலத்திற்கான பட்டா எண்ணில், காளியப்பன் மகன் பச்சையப்பன் மற்றும் சடையன் என்கிற பச்சையப்பன் என இருவரது பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, பட்டாவில் உள்ள சடையன் என்ற பச்சையப்பன் என்பவருக்கும், தங்கள் நிலத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தவறுதலாக பதிவாகி உள்ளது என கூறிய கணேசமூர்த்தி, பட்டாவில் இருந்து அந்த பெயரை நீக்கித் தருமாறு, கடந்த டிசம்பர் மாதம் 12ம்தேதி, நூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கேட்டுள்ளார்‌.

அப்போது, பட்டாவில் பெயர் நீக்கம் செய்வதற்கு, வெங்கடேசன் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர், டிசம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில், கணேசமூர்த்திக்கு போன் செய்த வெங்கடேசன், தனக்கு அவசர தேவை என்றும், ரூ.20 ஆயிரம் கொடுத்தால் போதும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசமூர்த்தி, இதுகுறித்து நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் அறிவுரையின் படி, கணேசமூர்த்தி நேற்று மதியம் விஏஓ அலுவலகத்துக்கு சென்று, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, அங்கிருந்த விஏஓவின் உதவியாளரான சாமிகவுண்டனூரைச் ேசர்ந்த அமுதா என்பவரிடம் கொடுத்துள்ளார்.அந்த பணத்தை வாங்கிய அமுதா, விஏஓ வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார்.

அவர் பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணைக்கு பிறகு, விஏஓ வெங்கடேசன், உதவியாளர் அமுதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம், நல்லம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது appeared first on Dinakaran.

Tags : VAO ,Bhatta ,Nallampally ,Patta ,Dharmapuri district ,Aroor ,Mita Nyulahalli ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!