×

சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிற்பதால் திருச்செந்தூர் கோயில் வாசலில் கடும் போக்குவரத்து நெருக்கடி

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் வந்து வழிபடுகின்றனர்.

தற்போது கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருவதால் பஸ்கள் அனைத்தும் தேரடி வரை வந்து பக்தர்களை ஏற்றியும், இறக்கி விட்டும் செல்கின்றன. கார், வேன் போன்ற வாகனங்கள் மட்டுமே நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுகின்றன. இதனால் வடக்கு டோல்கேட்டை தாண்டி உள்ளே வாகனங்களை நிறுத்த முடியாது. இந்த பகுதியில் உள்ள விடுதிகளுக்கு வரும் வாகனங்கள், வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சரவணப் பொய்கை அருகே சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. பக்தர்களும் இப்பகுதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்கின்றனர். இதன் காரணமாக இந்த சாலையின் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

ஏற்கனவே போக்குவரத்து போலீசார், டிபி ரோட்டில் ஒரு வழிப்பாதையாக வந்து தாலுகா ஆபீஸ் வழியாக வாகனத்தை வெளியே அனுப்பி விடுகின்றனர். ஆனால் போக்குவரத்து போலீசார் இல்லாத நேரத்திலும், இரவு நேரத்திலும் வரும் வாகனங்கள், ரோட்டில் இருபக்கமும் நிறுத்தப்படுகிறது. எனவே எந்நேரமும் வாகனங்களை முறையாக கோயிலுக்கு வந்துவிட்டு வெளியே நிற்பதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிற்பதால் திருச்செந்தூர் கோயில் வாசலில் கடும் போக்குவரத்து நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple gate ,Tiruchendur ,Tiruchendur Subramania Swamy temple ,Arupada ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக...