×

பொங்கலூரில் பி.ஏ.பி. பாசன திட்ட பகிர்மான குழு ஆலோசனை கூட்டம்

 

பல்லடம், ஜன.6: பல்லடம் அருகே பொங்கலூரில் பி.ஏ.பி. பாசன திட்ட பகிர்மான குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டத்தின் முதலாம் மண்டல பாசனத்திற்கு பாலாறு உபவடிநீர் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது சம்பந்தமாக திருமூர்த்தி – நீர்த்தேக்க பகிர்மான குழுவின் தலைவர்கள் மற்றும் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் பல்லடம் அருகேயுள்ள பெங்கலூரில் நடைபெற்றது.

பகிர்மான குழு தலைவர்கள் தெய்வசிகாமணி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். பொங்கலூர் ஆழியாறு வடிநில பொங்கலூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அசோக்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தின் போது பி.ஏ.பி திட்டத்தின் முதலாம் மண்டல பாசனம் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ தொடங்க உள்ள நிலையில் கால்வாய்களை சுத்தம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் முதலாம் மண்டல பாசனம் பெறும் கால்வாயில் சுத்தம் செய்ய அரசிடமிருந்து நிதி ஆதாரத்தை பெறுவது, கால்வாய்களை முழுமையான அளவில் சுத்தம் செய்த பின்னரே திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.முதலாம் மண்டலத்தை சாராத கால்வாய்களில் தண்ணீர் எடுக்கும் நபர்கள் மற்றும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொங்கலூரில் பி.ஏ.பி. பாசன திட்ட பகிர்மான குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pongalure ,Palladam ,Irrigation Project Distribution Committee ,Thirumurthy dam ,Palaru ,Parambikulam ,Azhiyar ,Pongalur ,Committee ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...