×

கோடை சீசனுக்காக ஊட்டி தேயிலை பூங்காவில் பொலிவுபடுத்தும் பணிகள் துவக்கம்

 

ஊட்டி, ஜன. 6: ஊட்டி தொட்டபெட்டா அருகே அமைந்துள்ள தேயிலை பூங்காவில் கோடை சீசனுக்காக பொலிவுபடுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி முழுமையாக சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வதற்கென தோட்டக்கலைத்துறை சார்பில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் தேயிலை பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன.

இங்கு கோடை சீசன் சமயத்தில் வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்டவைகள் நடத்தப்படுகின்றன. தேயிலை பூங்காவானது ஊட்டி – கோத்தகிாி சாலையில் சுதார் 7 கி.மீ., தொலைவில் தொட்டபெட்டா அருகே அமைந்துள்ளது. இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களின் நடுவே நடைபயணம் மேற்கொள்ளும் போது தேயிலையின் வரலாற்றை அறியும் வகையில் தகவல் பலகைகள், பூங்காகவை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் காட்சி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் கொண்ட சிறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தேயிலை தூள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் மாதிரிகளும் நிறுவப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடை சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் வகையில் பூங்காவில் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. காய்ந்த நாற்றுகள் அகற்றப்பட்டு சீசனுக்கு தயார் செய்யும் வகையில் புதிய ரக நாற்றுகளும் நடவு செய்யப்பட உள்ளன. பூங்காவில் உள்ள புல்தரையை பராமரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கோடை சீசனின்போது பூங்கா புதுபொலிவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை சீசனுக்காக ஊட்டி தேயிலை பூங்காவில் பொலிவுபடுத்தும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty Tea Park ,Ooty ,Ooty Thottapetta ,Coonoor ,Kudalur ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...