×

ஆஸ்திரேலியாவுடன் 3வது டெஸ்ட்: தோல்வியின் பிடியில் பாகிஸ்தான்; 2வது இன்னிங்சில் 68/7

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், 2வது இன்னிங்சில் 68 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறி வரும் பாகிஸ்தான் அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த் மற்றும் மெல்போர்னில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் கடந்த 3ம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன் குவித்தது. ரிஸ்வான் 88, ஜமால் 82, ஆஹா சல்மான் 53, கேப்டன் ஷான் மசூத் 35, பாபர் ஆஸம்26 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 109.4 ஓவரில் 299 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லாபுஷேன் 60, மிட்செல் மார்ஷ் 54, கவாஜா 47, ஸ்மித், கேரி தலா 38, வார்னர் 34 ரன் எடுத்தனர். பாக். பந்துவீச்சில் ஜமால் 21.4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 69 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதைத் தொடர்ந்து, 14 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. 3ம் நாள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 68 ரன் மட்டுமே எடுத்துள்ளது (26 ஓவர்). சைம் அயூப் 33, பாபர் ஆஸம் 23 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர் (4 பேர் டக் அவுட்). ரிஸ்வான் (6), ஜமால் (0) களத்தில் உள்ளனர். ஹேசல்வுட் 4, ஸ்டார்க், லயன், ஹெட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 3 விக்கெட் இருக்க, பாகிஸ்தான் 82 ரன் மட்டுமே முன்னிலையில் உள்ளதால் ‘ஒயிட்வாஷ்’ நெருக்கடியுடன் இன்று 4வது நாள் சவாலை சந்திக்கிறது.

The post ஆஸ்திரேலியாவுடன் 3வது டெஸ்ட்: தோல்வியின் பிடியில் பாகிஸ்தான்; 2வது இன்னிங்சில் 68/7 appeared first on Dinakaran.

Tags : Australia ,Pakistan ,Sydney ,Pakistan… ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது