×

பெரியார் பல்கலை முறைகேட்டில் ஈடுபட்ட துணைவேந்தர், பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: பேராசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் மற்றும் தலைமறைவாக உள்ள பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேலு மற்றும் 2 பேராசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தற்போது கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேலு ஆகியோரின் பதவி காலத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் வலிறயுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: போலிச்சான்றிதழ் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தமிழ்துறைத் தலைவர் பெரியசாமியை, ஆட்சிக்குழு உறுப்பினராக விதிகளை மீறி நியமித்தது, இணைவு பெற்ற அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடந்த ஆசிரியர் நியமன நேர்காணலுக்கு துணைவேந்தரின் பிரதிநிதியாகப் பரிந்துரைத்தது போன்ற பல்வேறு விதிமீறல்களில் துணை வேந்தர் ஈடுபட்டார். குற்றமற்றவர்கள் என்று விசாரணை அதிகாரியின் அறிக்கை வந்தும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை மதிக்காமலும் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கப் பொறுப்பாளர்கள் 4 பேரை பணி நீக்கம் செய்தார் துணைவேந்தர் ஜெகநாதன். ஓய்வுபெறும் ஆசிரியர்களான குமாரதாஸ், அன்பழகன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சாசன விதிகளை மீறி சட்டவிரோத மீளப்பணி வழங்குவதால், அரசுக்கு ரூ.86 லட்சத்திற்கு மேல் நிதி இழப்பு ஏற்படும் என ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதினேன்.

இதற்காக குறிப்பாணை வழங்கிய 24 மணி நேரத்திற்குள் பணியிடை நீக்கம் செய்து, கடந்த 22 மாதங்களாகத் தொடர் பணியிடை நீக்கத்தில் வைத்துள்ளனர். கடந்த 30 மாதங்களில் தனியார் பண்ணையின் முதலாளி போல பணிநீக்கம், பணியிடை நீக்கம், மெமோ, மிரட்டல் ஆகியவற்றை செய்துள்ளார். இந்த நிலையில்தான் தற்போது பூட்டர் பவுண்டேசன் விவகாரத்தில் வழக்குப்பதிவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் அலுவலகப் பணிகளை மேற்கொண்டுவரும் துணைவேந்தர் ஜெகநாதனின் செயலைத் தடுக்கவும், துறைரீதியான விசாரணை மேற்கொள்ளவும், அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் (பொ) தங்கவேல் ஆகியோரின், கடந்த 30 மாதகால பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊழல்கள், முறைகேடுகள், விதிமீறல்கள் மற்றும் ஆசிரியர், அலுவலர், மாணவர் விரோத நடவடிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* விதியை மீறி பதிவாளரின் மருத்துவ விடுப்புக்கு அனுமதி
தீன தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா என்ற திட்டத்தின் நிதியை கொள்ளையடித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பதிவாளர் தங்கவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் தலைமறைவாக இருக்கும் தங்கவேலின் மருத்துவ விடுப்பிற்கு, துணைவேந்தர் ஜெகநாதன் விதியை மீறி அனுமதி வழங்கியுள்ளார் என அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post பெரியார் பல்கலை முறைகேட்டில் ஈடுபட்ட துணைவேந்தர், பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: பேராசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Professors Association ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...