×

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற முதல்வர் கோரிக்கையை, பிரதமர் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது.

அந்த போட்டியின் அழைப்பிதழை நான் டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துவிட்டு, விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளேன். சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே முதலமைச்சர், நிவாரணத் தொகை வேண்டும் என்று பிரதமர் திருச்சிக்கு வந்தபோது கோரிக்கை வைத்திருந்தார். அதை பிரதமரிடம் நினைவுபடுத்தும்படி முதல்வர் சொல்லி அனுப்பியுள்ளார் என்பதையும் பிரதமரிடம் தெரிவித்தேன்.

அதற்கு பிரதமர் கண்டிப்பாக நிறைவேற்றித் தருகிறேன் என்று உறுதி கூறினார். மரியாதை நிமித்தமாக ராகுல்காந்தியை சந்திக்க அனுமதி கேட்டேன். ராகுல்காந்தியும் என்னை வரும்படி கூறினார். அதன்படி நான் ராகுல் காந்தியை சந்தித்து 10 நிமிடம் கலந்துரையாடினேன். அப்போது அவருடைய மணிப்பூர் பாதயாத்திரை வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தேன். அதோடு ராகுல்காந்தி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேத நிலவரங்களை என்னிடம் கேட்டறிந்தார். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

The post தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Udhayanidhi Stalin ,Vistara Airlines ,Delhi ,PM ,
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...