×

கணவனை மனைவி கார் ஏற்றி கொன்ற வழக்கு கடனை அடைக்க உதவுவதாக கூறியதால் தீர்த்துக்கட்டினேன்: கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே கார் ஏற்றி கொன்ற வழக்கில், கடனை அடைக்க உதவுவதாக கூறியதால் தீர்த்துக்கட்டினேன் என்று, தலைமறைவாக இருந்த கார் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பேப்பர் மற்றும் இரும்பு கடை வியாபாரியாக இருந்த பிரேம்குமார் கடந்த 2ம் தேதி அதிகாலை அயனாவரம் நியூ ஆவடி சாலை வழியாகச் சென்றபோது கார் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, பிரேம்குமாரின் மனைவி சன்பிரியாவே தனது ஆண் நண்பர் ஹரி கிருஷ்ணனை வைத்து காரை ஏற்றி பிரேம்குமாரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

காரை ஓஎல்எக்ஸ் மூலமாக வாங்கி ஹரி கிருஷ்ணனின் நண்பர் சரத் குமாருடன் சேர்ந்து பிரேம்குமாரை ஹரி கிருஷ்ணன் இந்த கொலையை செய்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அயனாவரம் போலீசார் சன்பிரியா மற்றும் அவரது ஆண் நண்பர் ஹரி கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கார் டிரைவர் சரத்குமாரை கோயம்புத்தூரில் வைத்து அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை கோயம்புத்தூரில் இருந்து நேற்று காலை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

ஹரிகிருஷ்ணன், சரத்குமார் ஆகிய இருவருக்கும் அயனாவரம் பகுதியில் கிரிக்கெட் விளையாடும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மது அருந்தும்போது சரத்குமார் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும், நிரந்தரமாக வேலை இல்லை எனவும், கடன் பிரச்னை இருப்பதாகவும் ஹரிகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். அப்போது ஹரி கிருஷ்ணன் சரத்குமாரின் கடனை அடைக்க உதவுவதாக தெரிவித்துள்ளார். அதற்காக ஒருவரை கொலை செய்ய வேண்டும் எனவும் சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார். முதலில் மறுத்த சரத்குமார் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், எதிர்வீட்டில் வசிக்கும் திருமணமான பெண்ணை காதலிப்பதாக சரத்குமாரிடம் ஹரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் எனது தங்கை திருமணத்திற்கு பணம் கொடுத்து உதவியவருக்கு, பதிலுக்கு நானும் பரிசு பொருட்கள் கொடுத்தேன். பின்னர் நான் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில் மயங்கி என்னை விரும்புவதாக அப்பெண் கூறினார். அவரது கணவர் வீடு வாங்குவதற்காக சுமார் 68 லட்ச ரூபாயும், 200 சவரன் நகைகளும் வாங்கி கொடுத்துள்ளார். அந்தப் பணம், நகைகளோடு அந்தப் பெண் என்னோடு வர தயாராக இருக்கிறார். இதில் எங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும் அவரது கணவரை கொலை செய்ய வேண்டும். அவரை கொலை செய்த பின்னர் 1 வருடத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எனது காதலியின் கணவரை கொலை செய்ய உதவினால் உனது கடன் 6 லட்சத்தையும் அடைத்து எங்களது திருமணத்திற்குப் பிறகு உனக்கு உதவுவதாக சரத்குமாரிடம் ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளான்.

இதில் முதற்கட்டமாக ஹரி கிருஷ்ணன் சரத்குமாருக்கு ரூ.1.50 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேற்கொண்டு பணம் கிடைக்கும் ஆசையில் சரத்குமாரும் பிரேம்குமாரை கொலை செய்வதற்கு ஒப்புக்கொண்டதார். இதில் கடந்த 3 மாதமாகவே பிரேம் குமாரை கொலை செய்ய பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளனர். ஆனால் போலீசில் மாட்டி விடுவோம் என பயந்து ஒவ்வொரு திட்டத்தையும் இவர்கள் கைவிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேம்குமாருக்கு ஹரி கிருஷ்ணன் பற்றிய தகவல் தெரியவந்து, ஹரி கிருஷ்ணனை அவர் அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரி, பிரேம்குமாரின் கதையை முடித்தே ஆகவேண்டும் என்ற வெறியோடு இருந்து இந்த செயலை செய்துள்ளார். இதில், தான் கார் டிரைவர் என்பதால் கொலை செய்ய ஒப்புகொண்டதாகவும், விபத்து போல சித்தரிப்பதற்காக சிசிடிவி இல்லாத இடமாக நோட்டமிட்டு பிரேம்குமாரை காரை ஏற்றி கொலை செய்ததாகவும் சரத்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்நிலையில் சன் பிரியாவிடம் விசாரணையை முடித்த அயனாவரம் போலீசார், நேற்று காலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சரத்குமாரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* தாயை வெறுத்த மகள்
உயிரிழந்த பிரேம் குமாருக்கு 12 மற்றும் 7 ஒரு வயதில் 2 மகள்கள் உள்ளனர். பெண் குழந்தைகள் என்பதால் இருவர் மீதும் பிரேம்குமாருக்கு அதிக பாசம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரேம்குமார் கொலை செய்யப்பட்டு, கடந்த 2 நாட்களாக விசாரணையில் உள்ள சன் பிரியா, நேற்று தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் சன்பிரியாவின் மூத்த மகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், எனது அம்மாவை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என மூத்த மகள் கூறிவிட்டார். ஏற்கனவே சன் பிரியா வீட்டிற்கு ஹரிகிருஷ்ணன் வந்து போனபோது மூத்த மகள் இதனை அப்பாவிடம் கூறி விடுவேன் என கூறிவந்துள்ளார். இதனால் சன் பிரியாவிற்கும் அவரது மூத்த மகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ‘வீட்டிற்கு ஒரு அங்கிள் அடிக்கடி வந்து செல்கிறார்’ என்று மூத்த மகள் தனது தந்தை பிரேம்குமாரிடம் கூறிவிட்டார். இதனால் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே நடந்த சம்பவம் ஒவ்வொன்றும் குழந்தைகள் மனதில் நன்கு பதிந்து விட்டது. பாசம் வைத்த தந்தை இறந்துவிட்ட சோகத்தில் தனது தாயிடம் பேச அவர்கள் தயாராக இல்லை.

The post கணவனை மனைவி கார் ஏற்றி கொன்ற வழக்கு கடனை அடைக்க உதவுவதாக கூறியதால் தீர்த்துக்கட்டினேன்: கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ayanavaram, Chennai ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு