×

ஊழல் கண்காணிப்பு ஆணைய வரம்புக்குள் டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் வருவதற்கான திருத்த விதிகள் செல்லும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தத்தை எதிர்த்தும், அதை 2011ம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊழல் தடுப்புச் சட்ட பிரிவின்படி அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசு ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை தன்னிச்சையானது என்று கூற முடியாது.

தேர்வாணைய விதிகள் சரிதான். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இந்த திருத்த விதிகள் காரணமாக தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்த விதிகளை முன் தேதியிட்டு அமல்படுத்துவது தவறில்லை. இந்த திருத்த விதிகள் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

தவறுகளுக்காக வழக்கு தொடர்வதில் இருந்து தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. சட்ட விதிகள் இல்லாத நேரத்தில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து 2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

The post ஊழல் கண்காணிப்பு ஆணைய வரம்புக்குள் டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் வருவதற்கான திருத்த விதிகள் செல்லும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Corruption Vigilance Commission ,Supreme Court ,CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu Public Service Selection Commission ,Anti-Bribery Department ,Tamil Nadu ,High Court ,Dinakaran ,
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...