×

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் இன்று மாலை உடல் அடக்கம்

திட்டக்குடி: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி உமா (43). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உமா 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவரால் கைவிடப்பட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வதிர்ஷ்டபுரம் பகுதியில் உள்ள அவரது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். உமா டைலரிங் வேலை செய்து வந்ததார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி திடீரென தலைவலிப்பதாக கூறிய உமா பின்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உமா மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி உமாவின் இருதயம், சிறுநீரகம், நுரையீரல், கருவிழி ஆகிய உறுப்புகள் ஜிப்மர் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. இங்கிருந்து தகுந்த பாதுகாப்புடன் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரது உடல் இன்று திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வதிஷ்டபுரம் பகுதியில் உள்ள அவரை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன் பேரில் இன்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் இன்று மாலை உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Thitakudy ,Murugesan ,Kandamangalam ,Villupuram district ,Uma ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்