×

கடன் தொல்லையில் இருந்து விடுபட எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?

என் தோழி ஒருத்தி ‘ஸ்ரீராமஜெயம்’ என்று தினமும் 108 என்ற கணக்கில் எழுதிவருகிறாள். இதனால் என்ன உபயோகம் என்று கேட்டேன். தனக்குத் தெரியாதென்றும், தன் தாயார் எழுதுவதால்தான் தொடர்ந்து எழுதிவருவதாகவும் சொன்னாள். அப்படி எழுதுவதால் என்ன பயன்?

– வி.கணபதி சுந்தரம், சின்னசேலம்.

மனதை ஒருநிலைப்படுத்தும் ஆன்மிகம் சார்ந்த பயிற்சி அது. உங்கள் தோழி அவ்வாறு எழுதுவதன் நோக்கம் புரியாமல் இருப்பதைவிட, அதே பயிற்சியை மேற்கொள்ளும் அவரது தாயாரும் அதற்கான சரியான விளக்கத்தை அளிக்காதது வியப்பாகத்தான் இருக்கிறது. ராமநாமத்தை அடுத்தடுத்து எழுதும்போது மனம் அப்படியே அதில் லயிக்க வேண்டும். ஒவ்வொரு முறை எழுதும்போதும், அப்போதுதான் முதல் முறையாக எழுதுவது போன்ற ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும் எழுத வேண்டும்.

இந்தப் பயிற்சி, எண்ணம் கூர்மையாவதற்கும், மனதை ஒருநிலையில் நிறுத்தவும் வழிகாட்டும். எழுதுவதில் ஆழ்ந்துவிடும் இதே மனப்பக்குவத்தை நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் காண்பித்தால், நாம் எடுத்துக்கொண்ட பணிகள் எல்லாம் செம்மையாக நிறைவேறும். அதாவது, ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதுவதன் பலனை அடையமுடியும்! அந்த மந்திரத்தை ஒருநாளைக்கு எத்தனை முறை எழுதுவது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

பிரணவ மந்திரத்தோடு சேர்த்து இறைவன் பெயரை எந்நேரமும் கூறி வருகிறேன். இவ்வாறு நான் எந்நேரமும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கலாமா? அல்லது ஆசனம் போட்டு அமர்ந்துதான் கூற வேண்டுமா?

– கணேஷ், திசையன்விளை.

குருநாதரிடமிருந்து முறையாக உபதேசம் பெற்ற மந்திரம் என்றால் குருநாதரின் வழிகாட்டுதலின்படியே ஜபம் செய்ய வேண்டும். ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடி தியானித்து முதலில் மானசீகமாக குருநாதரை வணங்கிவிட்டுத்தான் ஜபம் செய்யத் துவங்க வேண்டும். இதுபோன்ற சக்தி வாய்ந்த மந்திரங்களை, ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடி ஜபிப்பதே பலன் தரும்.

கவனத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டு உதடுகள் மாத்திரம் மந்திரத்தை ஜபிப்பதில் பலன் இல்லை. ஸ்லோகங்கள் என்பது வேறு, மந்திரம் என்பது வேறு, அதிலும், பிரணவ மந்திரம் என்பது ஓம்காரத்தைக் குறிக்கும். அகார, உகார, மகாரத்தின் இணைவான ஓம்காரத்தின் உண்மையான பொருளை உணர்ந்துகொண்டு ஜபிப்பவர்கள், ஆசனத்தில் முறையாக அமர்ந்துதான் ஜபம் செய்வார்கள். உங்கள் குருநாதரின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுங்கள்.

கடன் தொல்லையில் இருந்து விடுபட எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
– ஹமோனிகா அரசு, சின்னதிருப்பதி.

எந்தவிதத்தில் உண்டான கடன் என்பதைப் பொறுத்து உங்கள் கேள்விக்கான விடை மாறுபடும். அவசியத்திற்கு வாங்கிய கடன், அநாவசிய ஆடம்பர செலவிற்காக வாங்கும் கடன், நியாயமான முறையில் குறைந்த வட்டிக்கு வாங்கிய கடன், கந்துவட்டி முதலான கடுமையான தொல்லைகளைத் தரக்கூடிய கடன், என்று எந்த முறையில் கடன் பிரச்னையால் தொல்லை உண்டாகிறது என்பதைப் பொறுத்து வழிபாட்டு முறையும் மாறுபடும். பொதுவாக, செல்வ வளத்திற்கு மகாலட்சுமி வழிபாடு ஒன்றே போதுமானது. வீட்டினில் செல்வவளம் பெருகும்போது தானாகவே கடன் பிரச்னையும் முடிவிற்கு வந்துவிடும்.

மகளின் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளுக்காக வாங்கிய கடன் பிரச்னை தீர லட்சுமி குபேரபூஜை செய்து வணங்க வேண்டும். நில புலங்கள், சொத்து சேர்க்கை போன்ற விவகாரங்களில் உண்டான கடன் பிரச்னைகளுக்கு `அனந்தவிரதம்’ (பாத்ரபத சுக்ல சதுர்த்தசி – ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த 14-வது நாள்) நோன்பு நோற்பதால் தீரும். கந்துவட்டி முதலான கடுமையான கடன் பிரச்னைகள் தீர லட்சுமி நரசிம்மரை `ருண விமோசன மந்த்ரம்’ சொல்லி வழிபட வேண்டும். அநாவசிய ஆடம்பரத்திற்காகவும், வீண் பகட்டிற்காகவும் கடன் வாங்குபவர்கள் அதனால் உண்டாகும் தொல்லைகளை கர்மாவிற்கேற்ற பலனாக அனுபவித்தே தீர வேண்டும்.

கடன் வாங்கும் சூழலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையே நாம் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனை விடுத்து ஸ்ரீநிவாசப் பெருமாளே குபேரனிடம் கடன் வாங்கினார், நான் வாங்கினால் என்ன என்று விதண்டாவாதம் பேசக்கூடாது. முதலில், நாமும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்ரீநிவாச புராணத்தில் உள்ள சூட்சுமத்தை புரிந்துகொள்ளும் மனப் பக்குவமும் வேண்டும். காலை, மாலை இருவேளையும் சந்தியா காலங்களில் எவரொருவர் இல்லத்தில் விளக்கேற்றி இறைவனின் நாமம் உச்சரிக்கப் படுகிறதோ அந்த இடத்தில் கடன் பிரச்னைகள் உண்டாவதில்லை.

தொகுப்பு: அருள்ஜோதி

The post கடன் தொல்லையில் இருந்து விடுபட எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : V. Ganapathy Sundaram ,
× RELATED செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்