×

வடமாநில தொழிலாளர்களின் தவிப்பை போக்கும் வகையில் காய்கறி கடையில் இந்தியில் விலை பட்டியல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் வட மாநில தொழிலாளர்களின் தவிப்பை போக்கும் வகையில் காய்கறி கடையில் இந்தியில் விலை பட்டியல் தொங்க விடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. துணிக்கடை, பேக்கரி, ஓட்டலில் மாஸ்ட்டர், சப்ளையர், கிளீனர், பழக்கடை, பானிபூரி விற்பனை செய்தல், இவ்வாறு அனைத்து துறைகளிலும் அவர்களது சேவை தொடர்கிறது, சென்ற ஆண்டு நாற்று அடித்தல் மற்றும் நடவு செய்தலில் அசத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப்பணிக்கு ஒப்பந்த தொழிலாளர்களே வடமாநிலத்தவர்கள்தான். மயிலாடுதுறையில் கூலித்தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தைக் கண்டு வடமாநிலத்தவர்கள் அதிசயித்துப் போகின்றனர். சாதாரணமாக ஓட்டல் சரக்கு மாஸ்ட்டர் 12 மணிநேர வேலை செய்வார் அவரது நாள் சம்பளம் ரூ.1000 ஆகும். ஆனால் அதே வேலையை கற்றுக் கொண்டு வடமாநிலத்தவர்கள் ரூ.500 கொடுத்தாலே மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.

வட மாநிலத்தில் ஒருசில பகுதிகளில் மாதம் முழுவதும் வேலை செய்தாலும் ரூ.5ஆயிரம்கூட சேர்க்க முடிவதில்லை. ஆனால் இங்கே அனைத்து செலவுகளும்போக மாதம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் சேமிக்க முடிகிறது என தொழிலாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஒருசில நிறுவனங்கள் வடமாநிலத்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிடுகின்றனர்.

பலர் தாங்களாகவே அறை வாடகைக்கு எடுத்து சமைத்து சாப்பிட்டுவருகின்றனர். அவர்கள் மளிகை மற்றும் காய்கறி வாங்குவதற்குள் மொழி ஒரு பிரச்னையாக உள்ளது. ஒருசில மாதங்களில் தமிழை கற்றுக் கொள்கின்றனர். மயிலாடுதுறையில் முதன்முறையாக மகாதானத்தெருவில் உள்ள ஒரு காய்கறி கடையில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு கிலோ ரூ.30 என சிலேட்டில் இந்தியில் எழுதி தொங்கவிட்டு வடமாநிலத்தவர்களது தவிப்பை போக்கியுள்ளனர்.

இது குறித்து காய்கறி கடை உரிமையாளர் கூறுகையில், மயிலாடுதுறையில் அதிக அளவிலான வட மாநில தொழிலாளர்கள் உள்ளதால் காய்கறிகளின் விலைகளை அவர்கள் அறிந்து கொள்ளம் வகையில் விலைப்பட்டியல் வைக்க வேண்டுகோள் விடுத்ததின் பெயரில் தற்போது விலை பட்டியல் பலகை இந்தியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் செல்வதாகவும்தெரிவித்தார்.

The post வடமாநில தொழிலாளர்களின் தவிப்பை போக்கும் வகையில் காய்கறி கடையில் இந்தியில் விலை பட்டியல் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...