×

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பனிப்பொழிவால் நெற்பயிர்கள் சேதம்

* காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க விவசாயிகள் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறுகாலூர், மணக்குடையானிருப்பு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் அதிகப்படியான பனிப்பொழிவின் காரணமாக புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் பயிர்கள் அனைத்தும் முழுமையாக பாதிப்புக்குள்ளாகி காய்ந்து கருகிப்போய் உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை செலவு செய்து இருக்கிறோம், புகையான் பூச்சி தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இருப்பினும் அவைகளை கட்டுப்படுத்த பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியும் இந்த பூச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் எங்களது பயிர்கள் அனைத்தும் சேதமாகிவிட்டது.

இதனை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நிவாரணம் பெற்றுத் தருவதோடு, சேதமான அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு இழப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் எங்கள் பகுதியில் மூன்று ஆண்டுகளாக பயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலங்களுக்கு எந்த ஒரு இன்சூரன்ஸ் தொகையும் வழங்கப்படவில்லை. இவ்வாண்டு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post காட்டுமன்னார்கோவில் பகுதியில் பனிப்பொழிவால் நெற்பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Sirukalur, Manakudayanirupu ,
× RELATED மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது