×

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய சைக்கிளை ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்த கலெக்டர், எம்எல்ஏ

*அணைக்கட்டு அருகே சுவாரஸ்யம்

அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிளை கலெக்டர், எம்எல்ஏ இருவரும் ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பென்னாத்தூர், சோழவரம், கீழரசம்பட்டு, ஊசூர் உட்பட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி வரவேற்றார். எம்எல்ஏ நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் அப்பள்ளியில் படித்து தற்போது பல்வேறு துறைகளில் சாதித்து வரும் மாணவர்களை நினைவுபடுத்தி பேசினார். தொடர்ந்து, 659 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சில சைக்கிள் டயர்களில் காற்று நிரப்பப்படாமல் இருந்ததை கவனித்த எம்எல்ஏ காற்று நிரப்பி வழங்குமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, அவசர அவசரமாக டயர்களில் காற்று நிரப்பப்பட்டது. உடனே எம்எல்ஏ நந்தகுமார், மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளி வளாகத்தில் ஓட்டிப்பார்க்க ஆரம்பித்தார். இதை கவனித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியனும் மற்றொரு சைக்கிளை எடுத்து ஓட்டிப்பார்த்தார்.
பின்னர், கலெக்டர், எம்எல்ஏ இருவரும் உற்சாகத்துடன் பள்ளி வளாகத்தில் ஒரு சுற்று வந்தனர். இதை கண்ட மாணவ, மாணவிகள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இச்சம்பவம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில், வேலூர் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் த.பாபு, கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கஜேந்திரன், கல்வி குழு தலைவர் அருள்நாதன், பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், துணைத்தலைவர் ஜீவசத்தியராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன், மேலாண்மை குழு தலைவர் சண்முகப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய சைக்கிளை ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்த கலெக்டர், எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Vellore district ,Bennathur ,Cholavaram ,Keerasampattu ,Usur ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...