×

தலக்குளத்தில் ஒன்றரை ஆண்டில் பழுது காங்கிரீட் சாலை அமைக்க கேட்டு கஞ்சி காய்ச்சும் போராட்டம்

திங்கள்சந்தை, ஜன. 5: தலக்குளம் ஊராட்சியில் தலக்குளம் குலாளர்தெரு வள்ளியாற்று பாலம் வழியாக கக்கோட்டுதலை ஊராட்சி குன்னத்துக்குளம் செல்லும் 850 மீட்டர் தார்சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த சாலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் தார் போடப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி தலக்குளம் ஊராட்சி தலைவி லெட்சுமி குமார் உட்பட பொதுமக்கள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். ஆனால் பலன் இல்லாததால் கடந்த 11ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அப்போது குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் வள்ளி உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் டிசம்பர் 31ம் தேதிக்குள் சாலை அமைத்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் குன்னத்துக்குளம் ஜங்ஷனில் நேற்று காலை கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவி லட்சுமி குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி, முன்னாள் ஊராட்சி தலைவர் எஸ்.எஸ் தாணு முன்னிலை வகித்தனர். தலக்குளம் ஊராட்சி முன்னாள் அதிமுக செயலாளர் குமார் பேசினார்.

ஆன்றணி, வேல்குமார், வார்டு கவுன்சிலர்கள் ஐயப்பன், கீதா, தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சங்கர், குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி கீதா, உதவி பொறியாளர் வள்ளி மற்றும் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கஞ்சி காய்ச்சி குடித்துவிட்டு கலைந்து சென்றனர்.

The post தலக்குளத்தில் ஒன்றரை ஆண்டில் பழுது காங்கிரீட் சாலை அமைக்க கேட்டு கஞ்சி காய்ச்சும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thalakkulam ,Thalakulam panchayat ,Kakkottai Panchayat Kunnathukulam ,Valliyartu Bridge ,Thalakulam Kulalar Road ,Talakulam ,
× RELATED குண்டும் குழியுமாக மாறிய தலைக்குளம்-உடையூர் சாலை