மதுரை: கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவின் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவைச் சேர்ந்த முகம்மது ஜூனைத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபிசிம்ஹா ஆகியோர் நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகின்றனர். இருவரும் முறையான அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு கட்டுமான விதிகளுக்கு எதிராக கட்டிட பணிகள் நடந்து வருகிறது. பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் மலைகளை குடைகின்றனர். எனவே, கட்டுமானங்கள் குறித்து முறையாக விசாரித்து 2 பேர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘இருவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டன. தற்போது நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட விதிப்படி சம்பந்தப்பட்ட கட்டிடங்களை சீல் வைத்து அகற்றுவது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன. 10க்கு தள்ளி வைத்தனர்.
The post கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் appeared first on Dinakaran.