×

கேலோ இந்தியா துவக்க விழாவுக்கு வரும் 19ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உறுதி

புதுடெல்லி: இந்தியாவை பொருத்தமட்டில் தற்போது வரையில் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ஆகிய இரண்டு விளையாட்டுக்களுக்கு மட்டுமே மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் பிற விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாகவும், அதேப்போன்று ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளிலும் சிறந்த வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்காக கேலோ இந்தியா என்ற விளையாட்டு போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேலோ இந்தியா போட்டியானது தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் டெல்லி வந்த தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 20 நிமுடம் இந்த சந்திப்பானது நடந்தது. அப்போது, கேலோ இந்தியா போட்டிக்கான அழைப்பிதழை பிரதமரிடம் உதயநிதி ஸ்டாலின் கொடுத்தார்.

இதையடுத்து செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கேலோ இந்தியா நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடத்துவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்காகவும், நேரில் சந்தித்து அந்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்குவதற்காகவும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கக் கேட்டிருந்தேன். அதற்கான நேரம் கொடுக்கப்பட்டதால், விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளேன்.

அதே போல, சென்னை, தூத்துக்குடி, நெல்லையில் மழை வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதிய நிவாரண நிதி வழங்க திருச்சி வந்திருந்த பிரதமரிடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். தேவையான நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் நினைவூட்ட அறிவுறுத்தினார் என்பதையும் தெரிவித்தேன். அதற்கு பிரதமரும் செய்துத் தருவதாக தெரிவித்தார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒவ்வொருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

* சோனியா, ராகுலுடன் சந்திப்பு
ஜன்பத் சாலையில் இருக்கும் சோனியா காந்தி வீட்டிற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை சந்தித்து பேசினார். அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார்.

The post கேலோ இந்தியா துவக்க விழாவுக்கு வரும் 19ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உறுதி appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Kelo ,India ,Minister Udayanidhi ,Stalin ,New Delhi ,Olympics ,PM Modi ,19th ,Gallo ,Minister ,Udayanidhi ,
× RELATED கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில்...