×

சென்னையில் வரும் 7, 8ம் தேதி நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதல்வர் ஆலோசனை: அமைச்சர், உயர் அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 7, 8ம் தேதி நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தை 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதுகுறித்த ஆர்வம் மென்மேலும் பெருகி வருகிறது. 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான செயல் திட்டத்தை உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிட தமிழகம் மும்முரமாகிறது. தமிழகத்தின் துடிப்பு மிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரமாண்டமான மாநாட்டில் ஜனவரி 7, 8 தேதிகளில் இணைந்திடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முக்கிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 5.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ள வெளிநாடு மற்றும் உள்நாட்டின் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள், அன்றைய தினம் கையெழுத்தாக உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

The post சென்னையில் வரும் 7, 8ம் தேதி நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதல்வர் ஆலோசனை: அமைச்சர், உயர் அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,World Investors Conference ,Chennai ,M.K.Stalin ,Chennai Trade Centre ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...