×

டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை : சென்னை: தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்பை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஜனவரி 06, 07 ஆகிய நாட்களில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கடந்த டிசம்பர் 16, 17 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சுழன்றடித்த கடும்புயல், பேய்மழை மற்றும் பெருவெள்ளம் ஆகிய இயற்கை பேரிடரால் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இன்னும் அந்த அவலத்திலிருந்து மக்களால் மீண்டுவர இயலவில்லை. இந்நிலையில், த.நா.பொதுத் தேர்வாணையம் சனவரி 06, 07 அன்று ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களை’ நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்தேர்வுகளைச் சிறப்புற எழுதுவதற்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏதுவான சூழல் இல்லை.

எனவே, தமிழ்நாடு அரசு இத்தேர்வினை இன்னும் சில வாரங்களுக்குப் பின்னர் நடத்தும் வகையில் தள்ளி வைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த போட்டித் தேர்வுகளை இதே காரணங்களை முன்னிட்டு பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளிவைத்து அறிவிப்பு செய்துள்ளது.

அதேபோல, தமிழ்நாடு பொதுத் தேர்வாணையமும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியாளர்களுக்கான தேர்வுகளைத் தள்ளிவைத்திட முன்வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Thirumavalavan ,CHENNAI ,Thol Thirumavalavan ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு