×

கடும் எதிர்ப்புக்கு பணிந்தது அமலாக்கத்துறை!: சேலம் விவசாயிகள் 2 பேர் மீதான வழக்கை கைவிட முடிவு..!!

சேலம்: சேலம் விவசாயிகள் 2 பேர் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சேலம் விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஏழை விவசாயிகள் 2 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

வழக்கின் பின்னணி:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குணசேகரனுக்கு எதிராக இவர்கள் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிற்கு இடையேதான் இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வந்து ஆஜராகும்படி, விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணனுக்கு கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

எதிர்ப்புக்கு பணிந்தது அமலாக்கத்துறை:

எழுத, படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. விவசாயிகள் இருவரின் நிலத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி குணசேகரன் முயற்சிக்க அமலாக்கத்துறை துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நிலத்தை விவசாயிகள் தர மறுப்பதாலேயே அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள் மீதான வழக்கை கைவிட ED முடிவு:

ஏழை விவசாயிகள் 2 பேர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிந்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. வங்கி கணக்கில் 500 ரூபாய் கூட இல்லாத விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது பெரிய அளவில் சர்ச்சசையானது. உணவிற்கே கஷ்டப்படும் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது பெரிய பிரச்சனை ஆனது. குறிப்பாக விவசாயிகளுக்கு சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியதற்கு அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

முன்னதாக தோட்டத்தில் அமைத்த மின்வேலியில் சிக்கி காட்டு மாடு உயிரிழந்தது தொடர்பாக விவசாயிகள் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது. வனத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த 2021-ல் ஆண்டே விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர். விவசாயிகளை சேலம் நீதிமன்றம் விடுவித்தது அண்மையில் தெரியவந்ததால் வழக்கை கைவிடுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கடும் எதிர்ப்புக்கு பணிந்தது அமலாக்கத்துறை!: சேலம் விவசாயிகள் 2 பேர் மீதான வழக்கை கைவிட முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Enforcement Department ,Ramanayakanpalayam ,Atur ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...