×

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை நிலைய செயலாளருமான கு.க.செல்வம் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைமை நிலையச் செயலாளராக இருந்து வந்த கு.க.செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர். சமீப காலமாக அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, கடந்த 2 மாதங்களாக கோமா நிலையில், இருந்தவர் நேற்று காலை காலமானார். அவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். எம்பி டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏக்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா முகைதீன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர் ரங்கநாதன், அன்பகம் கலை அஞ்சலி செலுத்தினர். அதிமுகவில் இருந்த கு.க.செல்வம் 1997ல் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கு.க.செல்வம், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.2016 தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார். 2021 வரை திமுக எம்எல்ஏவாக இருந்த கு.க.செல்வம், பாஜவில் சேர்ந்தார். 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வத்துக்கு தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கு.க.செல்வம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் ‘‘வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரர் கு.க.செல்வம். அவர் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது என்று எண்ணும் போது நெஞ்சம் விம்முகிறது. அவரது பேச்சுதான் பலருக்கும் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்குமே தவிர, அவரது வெள்ளை உள்ளம் பழகும் எவர்க்கும் கற்கண்டாய் இனிக்கும். இனி அந்தக் கற்கண்டைக் கட்சி தோழர்கள் காண இயலாது எனும் எண்ணம் வருத்துகிறது. சென்னை மேற்குப் பகுதியில் திமுகவை வளர்த்த செயல்வீரர், தென்சென்னை மாவட்டக் துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர் எனக் கட்சிக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்ட பிள்ளை மனம் கொண்ட திமுக வீரர் அவர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைத்துக் கொண்டு, கலைஞரின் அன்புத் தம்பிகளில் ஒருவராக விளங்கினார்.

அதுமுதல் என் மீது மிகுந்த அன்பைச் செலுத்தி வந்தவர் கு.க.செல்வம். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி ஆற்றினார். சிறிது காலம் தடம் மாறிச் சென்றாலும், மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார். அதுதான் கு.க.செல்வம். அவர் சென்றபோதே திரும்ப வந்துவிடுவார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். கு.க.செல்வம் மறைவு எனக்கும் பேரிழப்பாகும். என்னை நானே தேற்றிக் கொண்டு, குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார்.

The post திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : DMK ,MLA ,KU Selvam ,Chief Minister ,MU K Stalin ,CHENNAI ,Former ,K. K. Selvam ,M. K. Stalin ,K.K.Selvam ,M.K. Stalin ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்