×

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை தருவதாக மோசடி வழக்கில் கண்டக்டர்கள் உட்பட 900 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கலான கூடுதல் குற்றப்பத்திரிகையில் தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள், கண்டக்டர்கள், ஊழியர்கள் என 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2017ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். விசாரணையின் போது, இந்த மோசடியில் 900 பேர் வரை சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்ததால் அவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. யாரெல்லாம் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளார்களோ அவர்களை எல்லாம் வழக்கில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளியாக சேர்க்கப்பட சில போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், குற்றம்சாட்டப்பட்ட சில போக்குவரத்து ஊழியர்கள் லஞ்சம் கொடுக்காமல் தகுதி அடிப்படையில் பணியில் சேர்ந்த நிலையில் அவர்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறி குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலரை விசாரிக்க அரசின் அனுமதி மற்றும் ஒப்புதல் பெறும் நடவடிக்கையின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

* மோசடியில் 900 பேர் வரை சம்பந்தப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
* அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* மோசடியில் சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் வழக்கில் சேர்க்க போலீஸ் நடவடிக்கை.

The post அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை தருவதாக மோசடி வழக்கில் கண்டக்டர்கள் உட்பட 900 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கலான கூடுதல் குற்றப்பத்திரிகையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Madras Special Court ,CHENNAI ,minister ,Senthil Balaji ,Chennai Special Court ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்