×

தேர்தலுக்காக குடும்பங்களை பிரிக்க ஒரு கிலோ தங்கமும், பென்ஸ் காரும் கூட தருவார்கள்: காங்கிரசில் சேர உள்ள தங்கைக்கு ஆந்திரா முதல்வர் எச்சரிக்கை

திருமலை: தேர்தலுக்காக குடும்பங்களை பிரிக்க 1 கிலோ தங்கமும், பென்ஸ் காரும் கூட தருவார்கள். இதுபோன்ற மாயவார்த்தைக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு மூத்த குடிமக்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என மொத்தம் 66 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு மாதாந்திர பென்ஷன் தலா ரூ.3 ஆயிரம் வழங்கி ெதாடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி சமூக பாதுகாப்பு பென்ஷன் திட்டத்தில் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். சந்திரபாபு ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஜென்ம பூமி கமிட்டி என்ற பெயரில் லஞ்சம் வாங்கிய பிறகு பென்ஷன் வழங்குவதற்கான உதவித்தொகை கிடைக்கும்.

ஆனால் ஜெகன்மோகன் ஆட்சியில் ஜாதி, மதம், எந்த கட்சியை சேர்ந்தவர்கள் எனக்கு வாக்களித்தார்களா என்று எதையும் பார்க்காமல் லஞ்சம், ஊழல் என்று இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. சந்திரபாபு ஊழல் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தால் பவன் கல்யாண் சிறையில் சென்று ஆதரவு தருகிறார். சந்திரபாபுவின் ஊழல் பற்றி பவன் ஏன் பேசுவதில்லை. ஊழலில் பவன் கல்யாணும் ஒரு அங்கம் என்பதால் வாயடைத்து உள்ளார்.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்காக குடும்பங்களை பிரிக்கவும், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து, உங்களிடம் வருவார்கள். தேவைப்பட்டால், 1 கிலோ தங்கமும், பென்ஸ் காரும் கூட தருவார்கள். எது உங்களுக்கு வேண்டுமோ, அதை தேர்ந்தெடுங்கள். அவர்களின் மாய வார்த்தைக்கு ஏமாறவேண்டாம். இவ்வாறு அவர் பேசினார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளாவை எச்சரிப்பதுபோன்று பேசியிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஜெகன்மோகனுடன் ஷர்மிளா திடீர் சந்திப்பு

ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா தனது கட்சியை கலைத்து விட்ட நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். இந்த நிலையில் ஷர்மிளாவின் மகன் ஒய்.எஸ்.ராஜரெட்டிக்கும், அட்லூரி பிரியாவுக்கும் வருகிற 18ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 17ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாக உடன் பிறந்த அண்ணனும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகனை நேற்று திடீரென நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்.

 

The post தேர்தலுக்காக குடும்பங்களை பிரிக்க ஒரு கிலோ தங்கமும், பென்ஸ் காரும் கூட தருவார்கள்: காங்கிரசில் சேர உள்ள தங்கைக்கு ஆந்திரா முதல்வர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Benz ,Andhra ,CM ,Congress ,Tirumala ,Chief Minister ,Jaganmohan Reddy ,Andhra Pradesh ,Kakinada ,
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...