×

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

சென்னை: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். “விஜயகாந்தின் மறைவின் போது, வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்ப இயலாத காரணத்தினால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இயலாததை எண்ணி வேதனையில் இருந்த நான் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினேன்” என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் உடல் சென்னை தீவுத் திடலுக்கு மாற்றப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வர முடியாதவர்கள் தற்போது அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “தேமுதிக நிறுவனரும், அன்பு நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் மறைவின் போது, தவிர்க்கமுடியாத சூழலில் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்ப இயலாத காரணத்தினால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இயலாததை எண்ணி வேதனையில் இருந்த நான், இன்று சென்னை திரும்பியதும் கேப்டன் அவர்களின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

சாலிகிராமத்தில் அமைந்துள்ள சகோதரர் கேப்டன் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாரை நேரில் சந்தித்து எனது இதயப்பூர்வமான ஆறுதலை எனது குடும்பத்தின் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் தெரிவித்துக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

The post கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் appeared first on Dinakaran.

Tags : Samatthu People's Party ,Sarathkumar ,Captain Vijayakanth ,CHENNAI ,Vijayakanth ,
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....