×

விஸ்வாமித்திரருக்கு மறைமுனிவன் என்ற பெயர் ஏன் தெரியுமா?

விஸ்வாமித்திரர் தன்னோடு ராமனை அனுப்பப் சொல்கிறார்.

“தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
இடையூறா, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காமவெகுளி என,
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
“செருமுகத்துக் காத்தி’’ என,
நின் சிறுவர் நால்வரினும்
கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என,
உயிர் இரக்கும் கொடுங்கூற்றின், உளையச் சொன்னான்.’’

தசரதன், ‘‘ராமனை அனுப்ப மாட்டேன். அவன் சின்ன வயது. இப்பொழுதுதான் போர்க்கலையினைப் பயின்றிருக்கிறான். அனுபவமில்லாதவன். நான் பத்து திசைகளையும் வென்ற அனுபவமிக்கவன். நான் உங்களோடு வந்து உங்கள் யாகத்தைக் காக்கிறேன்’’ என்று சொல்ல, விஸ்வாமித்திரருக்கு கோபம் வருகிறது. அவர் சொல்கிறார். ‘‘தசரதா! ராமன் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? அவனை நான் அறிவேன். வசிஷ்டரும் மற்ற மகரிஷிகளும் அறிவார்கள்’’ இந்த இடத்தில் வால்மீகியின் ஸ்லோகம்
அபாரமானது.

“அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்
வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி’’

இந்த ஸ்லோகத்துக்கு அதி அற்புதமான விளக்கம் தந்திருக்கிறார். பெரியவாச்சான் பிள்ளை. அஹம் என்றால் நான், வேத்மீ என்றால் அறிவேன்.

‘‘தசரதா! ராமனை நீ அறிய மாட்டாய். நான் அறிவேன்’’

1. ஜடா மகுடம் சூடிய நான் அறிவேன். மணிமகுடம் தரித்த நீ அறிய மாட்டாய்.
2. தரையில் உட்கார்ந்து மகரிஷிகள் இடம் பாடம் கேட்ட நான் அறிவேன். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் நீ அறிய மாட்டாய்.
3. யோகத்தில் வல்ல நான் அறிவேன். போகத்தில் திளைக்கும் நீ அறிய மாட்டாய்.
4. காட்டில் தவம் செய்யும் நான் அறிவேன். நாட்டில் ஆட்சி செய்யும் நீ அறிய மாட்டாய்.
5. புல்லை (தர்ப்பை) வைத்திருக்கும் நான் அறிவேன். வில்லை வைத்திருக்கும் நீ அறியமாட்டாய்.
6. மோஷ காமேஷ்டி யாகம் பண்ணின நான் அறிவேன். புத்திர காமேஷ்டி யாகம் பண்ணின நீ அறிய மாட்டாய்.
7. தர்ம மோஷம் எண்ணும் நான் அறிவேன். அர்த்த காமம் (பொருள், உலகியல் இன்பம்) எண்ணும் நீ அறிய மாட்டாய்.

இப்படி அடுக்கடுக்கி சொல்லிக் கொண்டே போகிறார். இதில் ‘‘நான் அறிவேன்’’ என்று சொல்லி அதோடு நிறுத்திக் கொள்ளாமல், “ராமன் யாரென்று வசிஷ்டருக்கும் தெரியும். அவர் உன்னுடைய குலகுரு, கேட்டுப் பார்” என்கிறார். அவர் ஏன் வசிஷ்டரையும் சேர்த்துக் கொண்டார் என்பதற்கு முக்கூரார் மிக அற்புதமான விளக்கத்தைச்
சொல்லுவார்.

ஒருநாள் இந்திரனுடைய அவையிலே இந்திரன் அமர்ந்திருந்தான். எல்லா ரிஷிகளும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் யாரோ ஒருவருடைய வரவுக்காக சபையை ஆரம்பிக்காமல் காத்திருந்தார்கள். அந்தச் சபையில் விஸ்வாமித்ர மகரிஷியும் இருந்தார். விஸ்வாமித்திர மகரிஷிக்கும் வசிஷ்டருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்த கதை. வசிஷ்டர் எதைச் செய்தாலும் அதை விஸ்வாமித்திரர் எதிர்ப்பார். விஸ்வாமித்திரர் இந்திரனிடம் கேட்டார் ‘‘இந்திரா! இத்தனை பேர் இருக்க நீ யாருக்காக காத்திருக்கிறாய்? வெகு நேரம் சபை ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறதே’’.

இந்திரன் ‘‘நான் வசிஷ்டருக்காகக் காத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் அவர் வந்து விடுவார்’’ என்று சொல்லும் போதே வசிஷ்டர் வந்து விட்டார். அவர் இந்திரன் பக்கத்திலே உட்கார்ந்து, தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தைச் சொல்லுகின்றார்;

‘‘நான் பூலோகத்திலே என்னுடைய சீடனான அரிச்சந்திரன் வீட்டில் ஒரு விசேஷத்திற்காக சென்று இருந்தேன். சற்று தாமத மாகிவிட்டது’’ என்று சொல்லுகின்ற பொழுது தூரத்தில் இருந்த விஸ்வாமித்திர மகரிஷி சத்தமாகச் சொல்லுகின்றார்.

‘‘வசிஷ்டர் சொல்லுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் தவறாகச் சொல்லுகின்றார் பொய்யாகச் சொல்லுகின்றார்’’ என்று சப்தமிட்ட உடன், இந்திரன் கேட்கின்றான்.

‘‘முனிவரே… என் பக்கத்திலே உட்கார்ந்து அல்லவா மிக மெல்லிய குரலில் வசிஷ்டர் பேசுகின்றார். அவர் பேசுகின்ற ரகசியம் என் காதுக்கே சரியாக விழவில்லை. தூரத்தில் இருக்கின்ற உங்கள் காதுகளில் அது எவ்வாறு விழுந்திருக்க முடியும்? வசிஷ்டர் என்ன பேசினார் என்பது தெரியாமலேயே அவர் பேசியது தவறு என்று சொல்கிறீர்களே, வசிஷ்டர் பேசியது தவறு என்பது உங்களுக்கு எவ்வாறு தெரியும்?’’ அப்போது விஸ்வாமித்திர மகரிஷி சொல்லுகின்றாராம்.

‘‘வசிஷ்டர் என்ன பேசுகின்றார், பேசினார், பேசுவார் என்று எனக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. வசிஷ்டர் எது பேசினாலும் எனக்கு தவறுதான்’’ என்று சொல்லுகின்றாராம். அப்படிப்பட்ட ஏழாம் பொருத்தம் இருவருக்கும் என்று இருக்கும் பொழுது தசரதனுடைய அவையிலே வந்த விஸ்வாமித்திரர் தசரதன் பிள்ளையாக பிறந்திருக்கும் ராமனின் அவதார ரகசியத்தை உடைக்கிறார். ‘‘தசரதா, உன் பிள்ளை என நினைக்கும் ராமன் யார் என்று உனக்குத் தெரியாது.

எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமல்ல மகரிஷிகளுக்கும் தெரியும். குறிப்பாக, உன் பக்கத்திலேயே உன்னுடைய குலகுருவாக அமர்ந்திருக்கிறாரே அந்த வசிஷ்டருக்கும் தெரியும்’’ என்கின்ற ஒரு மறைவான விஷயத்தை (மறை – மறைத்து சொல்லவேண்டிய விஷயம்) எடுத்து வெளிப்படுத்தியதால் விஸ்வாமித்திர மகரிஷியை ஆழ்வார்கள் “மறைமுனிவன்’’ என்கின்ற சொல்லினாலே குறிப்பிடுகின்றார்கள்.

வசிஷ்டர் தசரதனைப் பார்த்து, ‘‘தசரதா, ராமனை விஸ்வாமித்திரரோடு அனுப்பு. அது எல்லோருக்கும் நன்மை பயக்கும்.’’ என்று சிபாரிசு செய்ய தசரதன் அனுப்புகின்றான். மாதாவாகிய கோசலை தேவி பெற்றெடுத்த பிள்ளை ராமனை, தசரதனாகிய தந்தை, குருவாகிய வசிஷ்டன் சொல்ல, இன்னொரு குருவாகிய விஸ்வாமித்திரரோடு
அனுப்புகின்றான்.

“மறைமுனிவன்” என்று விஸ்வாமித்திரரை ஆழ்வார்கள் குறிப்பிட வேறு ஒரு காரணமும் உண்டு. மறைகளை எல்லாம் சுருக்கினால் 24 அட்சரங்கள் கொண்ட “காயத்ரி மந்திரம்” வரும். அந்த காயத்ரி மந்திரத்தை அளித்த காருண்ய சீலன் விஸ்வாமித்திர மகரிஷி அல்லவா! எனவே, அவரை “மந்திரம் கொள் மறை முனிவன்” என்ற தொடரால் குறிப்பிடுகிறார்கள் ஆழ்வார்கள்.

The post விஸ்வாமித்திரருக்கு மறைமுனிவன் என்ற பெயர் ஏன் தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Vishwamitra ,Rama ,Daruvanathul Yaan ,Vuruvara ,Ada Kamaveguli ,Niruthar ,Serumugatchu Kathi'' ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்