×

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்: இன்று டெல்லி செல்ல முடிவு

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். இதுதொடர்பாக இன்று டெல்லிக்கு சென்று 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று ஷர்மிளா கூறினார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் சகோதரி ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியை தொடங்கினார். தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் பிரிவதை விரும்பாத ஷர்மிளா தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் ஐதராபாத் லோட்டஸ்பாண்ட்டில் நேற்று தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஷர்மிளா ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இடுப்புலபாயாவில் உள்ள தனது தந்தையும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ராஜசேகரரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் ஷர்மிளா கூறியதாவது: தெலங்கானாவில் கே.சி.ஆரின் மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. அங்கு காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியும் முக்கிய பங்கு வகித்துள்ளது. 31 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியும் அங்கீகரித்து எனக்கு அழைப்பு விடுத்தனர். நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ். ஒவ்வொரு மனிதனின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. அந்த கட்சியுடன் இணைந்து பணி புரிய நானும் விரும்புகிறேன். இதற்காக நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். இரண்டு நாட்களில் நானே முழு விவரம் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர ஷர்மிளாவை களம் இறக்க ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைய உள்ளார்.

The post ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்: இன்று டெல்லி செல்ல முடிவு appeared first on Dinakaran.

Tags : Andhra Chief Minister Jaganmohan ,YS ,Sharmila ,Congress ,Delhi ,Tirumala ,Congress party ,Andhra Chief Minister ,Jaganmohan ,Y.S.R. ,Telangana… ,
× RELATED விவேகானந்த ரெட்டி கொலை பற்றி கருத்து...