×

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை: திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 38வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில்,பிரதமர் மோடி பேசியதாவது: புத்தாண்டில் முதல் நிகழ்ச்சியாக இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. அழகான தமிழ்நாட்டிலும், இங்கு ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு வரும் பாக்கியம் பெற்ற முதல் பிரதமர் நான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நமது தேசம் மற்றும் நாகரிகம் எப்போதும் அறிவை மையமாக கொண்டது. நாளந்தா மற்றும் தட்சசீலா போன்ற பழங்கால பல்கலைக்கழகங்கள் நன்கு அறியப்பட்டவை. அதேபோல, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் பெரிய பல்கலைக் கழகங்கள் உள்ளதாக குறிப்புகள் உள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்தியா எழுச்சிக்குப் பின்னால் உள்ள காரணிகளில் ஒன்று நமது பல்கலைக்கழகங்களின் எழுச்சி. முக்கியமாக, இந்தியா பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது.

அதே நேரத்தில், நமது பல்கலைக்கழகங்களும் உலக தரவரிசையில் சாதனை எண்ணிக்கையில் நுழைந்து வருகின்றன. இங்குள்ள ஒவ்வொரு பட்டதாரிகளும் 2047க்குள் இந்தியாவை உருவாக்க அல்லது மேம்படுத்த பங்களிக்க முடியும். 2047 வரையிலான ஆண்டை நமது வரலாற்றில் மிக முக்கியமானதாக மாற்றும் இளைஞர்களின் திறனில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

கவிஞர் பாரதிதாசன் கூறினார். புதியதோர் உலகம் செய்வோம் என்று. இதுவே உங்களின் பல்கலைக்கழக முழக்கமும் கூட. துணிச்சலான புதிய உலகத்தை உருவாக்குவோம் என்பதே இதன் பொருள். இந்திய இளைஞர்கள் ஏற்கனவே அத்தகைய உலகத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த நேரத்தை பயன்படுத்தி நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லுங்கள். விழாவில் மொத்தம் 1,528 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

The post பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை: திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Trichy Bharathidasan University ,Modi ,CHENNAI ,38th convocation ceremony ,New Year ,Tamil Nadu ,India ,
× RELATED கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில்...