×

விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவும், அமலாக்கத் துறையை காப்பாற்றவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஜனாதிபதிக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் கடிதம்

சென்னை: தமிழகத்தின் ஏழை தலித் விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தை காப்பாற்றவும் ஒன்றிய அரசில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். நுங்கம்பாக்கம், சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையரகம், துணை ஆணையர் பாலமுருகன் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த வயதான படிப்பறிவில்லாத மற்றும் 2 ஏழை தலித் விவசாயிகள் கண்ணையன் (72) மற்றும் கிருஷ்ணன் (67) ஆத்தூரில் 6.5 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளனர். தற்போது பாஜவின் சேலம், கிழக்கு மாவட்டச் செயலாளரான குணசேகரன் சட்டப்பூர்வ மோதலில் ஈடுபட்டுள்ள அவருக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. உள்ளூர் பாஜ தலைவர் ஒருவர் சட்டவிரோத நிலஅபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டிய நிலத்தகராறு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்பு இருப்பது புருவங்களை உயர்த்தியுள்ளது.

அந்த கடித உறையில் விவசாயிகளின் சாதியை இந்து பள்ளர்கள் என்று குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலப்பிரச்னையால் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திணறினர். அவர்களின் வங்கி கணக்கில் ரூ.450 மட்டுமே உள்ளது. முதியோர் ஓய்வூதியம் ரூ.1000 மற்றும் அரசு வழங்கும் இலவச ரேஷனை நம்பி உள்ளது, அவர்களின் வாழ்வாதாரம். அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ரித்தேஷ் குமார் விவசாயிகளுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி சம்மன் அனுப்பியுள்ளார். அதன்படி, விசாரணை அதிகாரி ரித்தேஷ் குமார், பணமோசடி தடுப்பு சட்டம் 2002ன் விதிகளின்கீழ் விசாரணை நடத்தி வருகிறார். கண்ணையன், கிருஷ்ணன் கடந்த 2023 ஜூலை 5ம் தேதி ஏஜென்சியின் முன் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பாஜவின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் குணசேகர், தங்களது நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்த முயன்றதாக சகோதரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கிருஷ்ணனின் புகாரைத் தொடர்ந்து குணசேகர் மீது 2020ம் ஆண்டு குற்றவியல் வழக்கு தொடங்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதேசமயம் கிருஷ்ணன் மற்றும் குணசேகர் இடையே உள்ள நிலத்தகராறு தொடர்பான சிவில் வழக்கு தற்போது ஆத்தூர் நீதிமன்றத்தில் தீர்வுக்காக காத்திருக்கிறது. அமலாக்கத்துறை இயக்குனரகம் பாஜவின் கைத்தடியாக பாஜவின் ஒரு அங்கமாக மாறியதை மேற்கண்ட சம்பவம் காட்டுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அமலாக்கத்துறை இயக்குநரகத்தை வெற்றிகரமாக பாஜ கொள்கை அமலாக்கத்துறை இயக்குனரகமாக மாற்றியுள்ளார்.

மாநில அரசு அதிகாரிகளைப் போல் மத்திய அரசு அதிகாரிகளான நாங்கள் உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தத்தை எங்கள் உத்தியோகப்பூர்வ கடமையை நிறை வேற்றுவதில் எதிர் கொள்வதில்லை. எனது 30 வருட சேவையில் எந்த ஒரு உள்ளூர் அரசியல்வாதியும், எந்த உதவிக்காகவும் என்னை அணுவதையோ அல்லது அழுத்தம் கொடுப்பதையோ பார்த்ததில்லை. டெல்லியில் இருந்து தான் சிபாரிசு வரும். மேற்கூறிய சம்பவத்தில் இருந்து இப்போது நிலைமை மாறிவிட்டது என்பதை தெளிவாக உணர முடிகிறது. இந்த நிலைக்கு நிர்மலா சீதாராமன் தான் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். நிதியமைச்சராக இருக்க தகுதியற்றவர். தமிழகத்தின் ஏழை தலித் விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தை காப்பாற்றவும் ஒன்றிய அரசில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவும், அமலாக்கத் துறையை காப்பாற்றவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஜனாதிபதிக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Deputy Commissioner ,Goods and Services Tax Department ,President ,Chennai ,Goods ,and Services ,Taxation ,Balamurugan ,EU Government ,Tamil Nadu ,Enforcement Directorate ,Deputy Commissioner of Goods and Services Tax ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...