×

மேலவளவு படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யக்கோரி வழக்கு : அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மேலவளவு படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அரசு தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கே.முத்துவேல்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் சாதிரீதியான பாகுபாடு உள்ளது. 1996ல் மேலவளவு ஊராட்சி ஒரு பிரிவினருக்கு ஒதுக்கியதை எதிர்த்து அங்கு போராட்டம் நடந்தது.

அங்கு முருகேசன் என்பவர் ஊராட்சித் தலைவரானார். 30.6.1997ல் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில், கவட்டையம்பட்டியைச் சேர்ந்த சேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2019ல் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.

இவர் தொடர்ந்து சாதிய ரீதியான குற்றங்களில் ஈடுபடுகிறார். இது முன்கூட்டிய விடுதலைகளுக்கான விதியை மீறுவதாகும். எனவே, அவரது விடுதலையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் மனுவிற்கு உள்துறை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 18க்கு தள்ளி வைத்தனர்.

The post மேலவளவு படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யக்கோரி வழக்கு : அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Melaval massacre ,Manikandan ,K. Muthuvelpatti ,Melur, Madurai district ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...