×

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சீன ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பலுக்கு தடை: இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு

கொழும்பு: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, சீன ஆராய்ச்சிக் கப்பல்களை அதன் துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இயக்கவோ கூடாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் இலங்கை கடற்படை தளத்தை பயன்படுத்தி சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் பாலிஸ்டிக் ஏவுகணை டிராக்கர்கள், ஹைட்ரோகிராஃபிக் கப்பல்களை கொண்டு ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

சீன கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆய்வு நடத்துவதால், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்தியா தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்த பிரதமர் மோடி, சீனக் கப்பல் இந்திய பெருங்கடலில் ஆய்வு செய்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், ஆய்வுக்கு அனுமதியளிக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். இது தொடர்பாக அமெரிக்காவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது. இந்நிலையில் சீனாவின் அறிவியல் ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹாங்-3, வருகிற 5ம் தேதி முதல் மே வரை இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஆழ்கடல் ஆய்வு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

4,600 டன் எடை கொண்ட இந்த கப்பலின் ஆய்வுக்கு மாலத்தீவின் சீன சார்பு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, சீன ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இயக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

The post இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சீன ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பலுக்கு தடை: இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Sri Lankan government ,Colombo ,Indian Ocean ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...