×

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எழுதியது யார்?.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்

புதுடெல்லி: அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், கடந்த 2019ல் உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும், நகரின் முக்கிய இடத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதியைத் தவிர, அந்த அமர்வில் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தீர்ப்பில் 5 நீதிபதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த தீர்ப்பை எழுதியது யார்? என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த நடைமுறையானது வழக்கமானது அல்ல. பொதுவாக நீதிபதிகள் அமர்வில் இருக்கும் உறுப்பினர்கள், முக்கிய தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் தனித்தனியாக தீர்ப்புகளை எழுதுவார்கள்.

ஆனால் அயோத்தி வழக்கில் அவ்வாறு நடக்கவில்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. வழக்குகளின் தீர்ப்பு தனிப்பட்ட முறையில் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல என்று அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பில் எந்த வருத்தமும் இல்லை’ என்றார்.

மேலும் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த தீர்ப்பின் மீதான விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

The post அயோத்தி வழக்கின் தீர்ப்பை எழுதியது யார்?.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ayoti ,Supreme Court ,New Delhi ,Chief Justice ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு