×

ஆன்மிகம் பிட்ஸ்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நிறம் மாறும் மணல்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நிறம் மாறும் மணல்

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் மூலவர் நாகராஜர் இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. இதில் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். இந்த நீருடன் சேர்ந்த மணலே பிரசாதமாக வழங்கப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலமான (ஆடி முதல் மார்கழி வரை) இந்த மணல் கருப்பு நிறமாகவும், உத்தராயண புண்ணிய காலமான (தை முதல் ஆனி முடிய) இந்த மணல் வெள்ளை நிறமாகவும் மாறுகிறது.

கல்வெட்டுக்களில் திருவெம்பாவை

வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் இரண்டாவது ராஜாதிராஜன் என்னும் சோழ மன்னனது காலத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் பாடுவதற்கும் மார்கழியில் திருவிழா நடைபெறுவதற்கும் பொருள் வழங்கப்பட்ட செய்திகள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. திருவெம்பாவை பற்றிக் கூறும் கல்வெட்டுக்களில் இது சிறந்ததாகும்.

திருவாதிரையில் திருமலை

திருப்பதி திருமலையில் எழுந்தருளியிருக்கும் வெங்கடாஜலபதிக்கு தினமும் துளசி தளத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஆனால், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று மட்டும் துளசி தளத்திற்குப் பதில் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். இதுபோல் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆற்றில் பவனி

ஈரோடு அருகில் உள்ள காங்கேயம்பாளையத்தில் அமைந்துள்ளது நட்டாறீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் காவேரி ஆற்றின் நடுவே தானாகவே தோன்றிய பாறையின் மீது அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். இத்திருக்கோயிலில் மார்கழி திருவாதிரைத் திருநாளில் இங்கு எழுந்தருளியுள்ள நடராஜரும், சிவகாமியம்மையும் பரிசலில் எழுந்தருள்வார்கள். இன்னொரு பரிசலில் மேள, தாளங்கள் முழங்க ஆற்றிலேயே கோயிலைச்சுற்றி வலம் வருவது எங்கும் தரிசிக்க இயலாது என்று கூறப்படுகிறது.

கிரிவலம் வரும் நடராஜர்

கரூர் அருகில் உள்ள ‘புகழிமலை’ வேலாயுதம் பாளையத்தில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு மார்கழி திருவாதிரை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். மலை அடிவாரத்தில் நடராஜப் பெருமானுக்கும் சிவகாமிஅம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பிறகு நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் கிரிவலம் வருவார்கள். அப்போது, தம்பதி சமேதராகக் காட்சி தரும் நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசித்தால் சுமங்கலிகள் நீண்ட சுமங்கலி பாக்கியம் பெறுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

லவண லிங்கம்

உப்பைக் கொண்டு செய்யப்படும் லிங்கம் உப்புலிங்கம் அல்லது லவண லிங்கம் எனப்படும் இந்த லிங்கத்தை வழிபடுவதால் கடன் தொல்லைகள் விலகி செல்வச் செழிப்பு உண்டாகும். உப்பு லட்சுமியின் வடிவமாகும். உப்புலிங்கத்ைத வழிபடுபவர்களுக்குத் திருமகள் தாமே முன்வந்து அருள்பாலிக்கின்றாள். இந்த லிங்கத்திற்கு முத்து மாலைகள் அணிவித்து வெல்லம் கலந்த பொருளை நிவே திப்பர். இது ஆனந்த லிங்கம் என்றும் அழைக்கப்படும். வருணன் இந்த வகை லிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருக்கின்றான் என்பர். கடன் தொல்லைகள் நீங்கவும், வியாதிகள் கரைந்து போகவும், கோயில்களில் உப்பைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் உள்ளது.

விபூதி கல்யாணி

திருஞானசம்பந்தர் இறைவனோடு தன் மனைவியோடும் சுற்றத்தினரோடும் அருட்சோதியும் கலந்த தலம் ஆச்சாள்புரம் என்றழைக்கப்படும் நல்லூர்ப் பெருமணமாகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை திருநீற்று உமையன்னை என்று அழைக்கப்படுகிறாள். இது வடமொழியில் விபூதி கல்யாணி என வழங்குகிறது. திருஞானசம்பந்தரின் திருமணத்தில் கலந்து கொண்டு சிவகதி சார்ந்த அனைவருக்கும் விபூதி அளித்தாள் என்று கூறுகின்றனர். விபூதியே அம்பிகையின் வடிவாகும். திருஞானசம்பந்தர் பராவணம் ஆவது நீறு என்று அருளிச் செய்துள்ளதைக் காண்கிறோம்.

தொகுப்பு: ஜெய செல்வி

The post ஆன்மிகம் பிட்ஸ்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நிறம் மாறும் மணல் appeared first on Dinakaran.

Tags : Nagaraja temple ,Nagarkot ,Moolavar Nagaraja ,Dakshinayana… ,
× RELATED வாறுதட்டு நாகராஜா கோயில் திருவிழா நாளை தொடக்கம்