×

61 உயிர்களை பலி கொண்ட மவுலிவாக்கம் கட்டிட விபத்து.. 7 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை : வழக்கை முடித்து வைக்க கோர உள்ளதாக முதல்வர் தரப்பு தகவல்

சென்னை : மவுலிவாக்கம் கட்டட விபத்தை சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைக்க கோர உள்ளதாக முதல்வர் தரப்பு தகவல் அளித்துள்ளது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்பு கட்டிடம், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 61 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் அதன் அருகில் கட்டப்பட்டு வந்த மற்றொரு 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டது. அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டு, நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைத்தார். ஆனால் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என கூறி கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடைசியாக, கடந்த 2017ம் ஆண்டு விசாரணைக்கு வந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது முதல்வராக இருக்கக் கூடியவர் மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் தரப்பு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை முடித்து வைக்கக் கோர இருப்பதாக தெரிவித்தது.

The post 61 உயிர்களை பலி கொண்ட மவுலிவாக்கம் கட்டிட விபத்து.. 7 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை : வழக்கை முடித்து வைக்க கோர உள்ளதாக முதல்வர் தரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Mauliwakkam building accident ,Chief Minister ,CHENNAI ,CBI ,Maulivackam building ,Mauliwakkam ,Porur, Chennai ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...