×

சபரிமலையில் மீண்டும் அதிகரிக்கிறது பக்தர்கள் கூட்டம்; நேற்று ஒரேநாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்..!!

திருவனந்தபுரம்: சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறந்த பிறகு 3வது நாளான நேற்று பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலையை பொறுத்தவரை மண்டல கால பூஜை முடிந்து மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நடை திறக்கப்பட்டு 3வது நாளான நேற்று 1 லட்சத்து 789 பேர் 18ம் படி வழியாக சென்று ஐய்யப்பனை தரிசித்துள்ளனர். இதனால் சன்னிதானம் அமைந்துள்ள பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரியநடை பந்தலில் இருந்து மரக்கூட்டம் வரை பக்தர்களின் வரிசை நீண்டு காணப்பட்டது.

பக்தர்களின் வருகை இனி வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்பதால் இந்த மாதம் 14ம் தேதியும், மகர விளக்கு பூஜை நடைபெறக்கூடிய 15ம் தேதியும் முன்பதிவு எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி பத்தனம்திட்டா காவல்துறை அதிகாரிகள் தேவசம் போர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலையும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. மேலும், சபரிமலையில் அரவணை பாயாசம் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதலாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

The post சபரிமலையில் மீண்டும் அதிகரிக்கிறது பக்தர்கள் கூட்டம்; நேற்று ஒரேநாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்..!! appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Makaravilakku Pooja ,Makaravilakku ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...