×

மூன்றாவது ஆண்டாக அயலகத் தமிழர்கள் தினம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 11, 12ம் தேதி நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மூன்றாவது ஆண்டாக அயலகத் தமிழர்கள் தினம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 11, 12ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: அயலகத் தமிழர் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத்தேடி என்றொரு பண்பாட்டுப் பயணத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் வேர்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் வரும் டிசம்பர் 27ம் தேதி காலை 8 மணி அளவில் மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இருந்து பயணம் தொடங்குகிறது.

தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான் இப்பண்பாட்டு பயணத்தை துவக்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் சென்னை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்வார்கள். இத்துடன் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் கலந்துரையாடல்களும் பயிற்சி வகுப்புகளும் இடம்பெறுகின்றன.

இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை கற்றுணர்வார்கள் மூன்றாவது ஆண்டாக அயலகத் தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். மேலும் தங்கள் நாடுகளுக்கு சென்று தமிழர்களின் கலாச்சார தூதுவர்களாகவும் செயல்பட ஊக்கம் பெறுவார்கள். மேலும் விவரங்களுக்கு செண்பகவள்ளி 6382067900, சத்தியா 9600153394, ராஜ்மோகன் 9551546616 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மூன்றாவது ஆண்டாக அயலகத் தமிழர்கள் தினம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 11, 12ம் தேதி நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Day ,Nandambakkam Trade Center ,Tamil Nadu Government ,Chennai ,Consular Tamils Day ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...