×

பா.ஜ. அரசை அகற்றினால்தான் இந்தியாவை பாதுகாக்க முடியும்: கே.பாலகிருஷ்ணன் உறுதி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மனித நேயம், மதச்சார்பின்மை, சமூக நீதி, நாடாளுமன்ற ஜனநாயகம், மாநில உரிமைகள் ஆகிய அனைத்தையும் கபளீகரம் செய்யும் ஒன்றிய பாஜ அரசு மதவெறியை பரப்பி மக்களை கூறுபோடும் பாசிச எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது. அதனை வீழ்த்தும் சாதனை மிக்க ஆண்டாக 2024 அமைந்திட வேண்டுமென்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்போம்.

ஒன்றிய பாஜ அரசு மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சி அடித்தளம் கொண்ட அரசியல் சாசனத்தின் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்திட்ட ஆண்டாகவே விடைபெறும் ஆண்டு அமைந்தது. வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் என்ற இரட்டை இலக்கோடு ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது. வறுமை, வேலையின்மை, விலை உயர்வு, பொதுத்துறை தனியார்மயம், மனுவாத கருத்தியல் பரப்பு, பாலின அடிப்படையிலான அநீதிகள், தீண்டாமை உள்ளிட்ட சாதிய சமூகக் கொடுமைகள், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என ஒன்றிய பாஜ அரசு நாட்டையே நாசம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் வெள்ள சேதத்திற்கு உரிய நிவாரண நிதி கொடுக்க மறுத்து வருவது, மாநிலத்திற்கான நிதி பங்கீட்டை மறுப்பது உள்ளிட்ட பாகுபாட்டு வஞ்சக அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. பாசிச பாணி ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் ஒன்றிய பாஜ அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதன் மூலமே இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதுகாக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலை நடப்பாண்டில் நாடு சந்திக்கவுள்ள நிலையில், மக்கள் விரோத, எதேச்சதிகார, வகுப்புவாத, வலதுசாரி பாஜ அரசை வீழ்த்துவதொன்றே இந்திய மக்களின் புத்தாண்டுச் சூளுரையாக அமைந்திட வேண்டும்.

The post பா.ஜ. அரசை அகற்றினால்தான் இந்தியாவை பாதுகாக்க முடியும்: கே.பாலகிருஷ்ணன் உறுதி appeared first on Dinakaran.

Tags : B.J. ,India ,K. Balakrishnan ,Chennai ,Marxist ,Union BJP government ,
× RELATED நீட் தேர்வில் குளறுபடி மருத்துவ...