×

கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன் அறிவித்தபடி சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் நேற்று முதல் இங்கிருந்து புறப்படுகிறது.

ஏற்கனவே கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் இருந்து டிச.31ம் தேதி முதல் ஜன.30ம் தேதி வரை பயணிக்க முன் பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் சென்று அங்கிருந்து பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோன்று தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நாகர்கோயில், திருநெல்வேலி மற்றும் மார்த்தாண்டம், காரைக்குடி, கும்பகோணம், சேலம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் இருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் நேற்று முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படுகிறது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை தவிர்த்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜன.15ம் தேதி வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும். இது தவிர்த்து சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும், அதேபோன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருபவர்கள் மாநகர பேருந்துகள் மூலம் வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இறங்கி, புறநகர் ரயில் மூலமாக சென்னைக்கு உட்புறம் செல்ல விரும்பும் பயணிகள் நலனுக்காக கிளாம்பத்திற்கு முன் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி அருகே உள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் இறக்கி விடப் படுவார்கள். அரசு விரைவு பேருந்துகளில் இணைய வழியில் முன்பதிவு செய்த பயணிகளிடம் கூடுதலாக பெற்ற வித்தியாச பயண கட்டணம் அவர்கள் பயணம் செய்த பிறகு பயணம் செய்தவர்களின் வங்கி கணக்கில் திரும்பசெலுத்தப்படும்.

The post கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Coimbed ,Thambaram ,Government Rapid Transport Corporation ,Chennai ,Klampakkam Bus Station ,Tamil Nadu ,Chief Minister ,MLA K. ,Minister of Transport ,Department ,Coimbet ,Dinakaran ,
× RELATED பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்...