×

தன்னம்பிக்கை, உற்சாகம், வேகத்துடன் 2024 புத்தாண்டில் வெற்றியின் புதிய உச்சம் தொட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘இந்தியா தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளது. அதே தன்னம்பிக்கை, உற்சாகம், வேகத்துடன் 2024ம் ஆண்டிலும் வெற்றியின் புதிய சிகரங்களை தொட வேண்டும்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி, அகில இந்திய வானொலியில் தனது 108வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது:
2023ம் ஆண்டு இந்தியா பல மகத்தான சாதனைகளை படைத்தது. இந்த ஆண்டு தான் பெண் சக்தியை போற்றக்கூடிய மகளிர் இடஒதுக்கீடு சட்டம் பல ஆண்டு காத்திருப்புக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக ஆகியிருக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியை பலர் எனக்கு நினைவுபடுத்தியிருக்கிறார்கள்.

சந்திரயான்-3 வெற்றியின் மூலம் நம்முடைய விஞ்ஞானிகள், குறிப்பாக பெண் விஞ்ஞானிகளால் நாடே பெருமிதம் கொள்கிறது. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டூ நாட்டூ’ பாடலுக்கும், தமிழ் ஆவணப்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்த போது அனைவரும் பெருமை அடைந்தோம்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் வென்றார்கள். கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி வீரர்கள் நன்கு விளையாடி அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டார்கள். நாம் அனைவரும் இணைந்து முயன்ற போது, நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மிகப் பெரிய ஆக்கப்பூர்வமான தாக்கம் உண்டானது.

இன்று தேசத்தின் அனைத்து இடங்களிலும் தன்னம்பிக்கை நிரம்பியிருக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்கிற உணர்வும், தற்சார்பு உணர்வும் எங்கும் நிறைந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டிலும் இதே உற்சாகத்தையும் வேகத்தையும் நாம் தொடர வேண்டும். இந்தியா புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதை நிறுத்தப் போவதில்லை என உறுதி ஏற்க வேண்டும்.

தேசமே முதன்மை என்பதை விட மேலான மந்திரம் வேறொன்றுமில்லை. இந்த மந்திரத்தை பின்பற்றி, நம் தேசத்தை வளர்ந்த தேசமாக உயர்த்துவோம். தற்சார்புடையதாக மாற்றுவோம். நீங்கள் அனைவரும் 2024ம் ஆண்டில் வெற்றிகளின் புதிய சிகரங்களை எட்ட வேண்டும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உடலுறுதியோடு இருக்க வேண்டும், அளவற்ற ஆனந்தத்தோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை. இவ்வாறு கூறினார்.

வேலுநாச்சியாருக்கு அஞ்சலி
ராணி வேலுநாச்சியார் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒவ்வொரு கால கட்டத்திலும் நம் பாரத பூமியை பெருமை அடையச் செய்த மகள்கள் உள்ளனர். அவர்களில் சாவித்ரிபாய் பூலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஆளுமை கலங்கரை விளக்கம் போன்றது. தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகள் இன்றும் வீர மங்கை வேலு நாச்சியாரை நினைவு கூறுகிறார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ராணி வேலுநாச்சியாரின் வீரம் மிகவும் ஊக்கம் அளிக்கிறது. ஜனவரி 3ம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’’ என்றார்.

ராம்பஜன் புதிய ஹேஷ்டேக்
அயோத்தி ராமர் கோயில் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து நாடு முழுவதும் உற்சாகம் நிறைந்துள்ளது. மக்கள் பல்வேறு விதங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் ராமர் மற்றும் அயோத்தி குறித்து புதிய பாடல்களும் பஜனைகளும் படைக்கப்படுகின்றன. பலர் புதி கவிதைகளை எழுதுகிறார்கள். இத்தகைய உங்கள் படைப்புகளை ராம்பஜன் என்கிற பொதுவான ஹேஷ்டேக் மூலம் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

The post தன்னம்பிக்கை, உற்சாகம், வேகத்துடன் 2024 புத்தாண்டில் வெற்றியின் புதிய உச்சம் தொட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,India ,Modi ,All India Radio ,New Year ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?